தேங்காய் சீசன் நிறைவடையும் நிலையில்... நம்பிக்கை!: விலை மேலும் உயரும் என எதிர்பார்ப்பு
தேங்காய் சீசன் நிறைவடையும் நிலையில்... நம்பிக்கை!: விலை மேலும் உயரும் என எதிர்பார்ப்பு
ADDED : ஜூலை 03, 2026 04:07 AM
பொள்ளாச்சி: 'தேங்காய் சீசன் நிறைவடையும் நிலையில், வரத்து குறைந்து தேவை அதிகரிக்க வாய்ப்புள்ளதால், இனி விலை உயரும்,' என, தென்னை விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்தனர். பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் தென்னை அதிகளவு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இப்பகுதியில் இருந்து, பல்வேறு பகுதிகளுக்கு தேங்காய், கொப்பரை அனுப்பப்படுகிறது.
கடந்த மார்ச் மாதம் துவங்கிய சீசன், தற்போது நிறைவடையும் நிலையில் உள்ளது. வடமாநில தொழிலாளர்கள், தேர்தலுக்காக சொந்த ஊருக்கு சென்றதால், கொப்பரை உற்பத்தி பாதிக்கப்பட்டது. எனினும் தேங்காய் உள்ளிட்டவை வரத்து அதிகரிப்பால், விலை சரிந்தது.
தற்போது, சீசன் நிறைவடைய உள்ள சூழலில், வரத்து குறைந்து விலை உயர வாய்ப்புள்ளதாக விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
தமிழ்நாடு தென்னை விவசாயிகள் நலச்சங்க பிரதிநிதி தங்கவேலு கூறியதாவது:
தமிழகத்தில், தேங்காய் உற்பத்தி சீசன் நிறைவடையும் தருவாயில் உள்ளதால், வரத்து குறைய வாய்ப்புள்ளது. ஆனால், ஏற்றுமதி இல்லை போன்ற காரணங்களை கூறி கார்ப்பரேட் நிறுவனங்கள், இடைத்தரகர்கள், 'சிண்டிகேட்' அமைத்து விலையை குறைத்துள்ளனர்.
தேங்காய் சீசன் முடியும் சூழலில், வரத்து குறைந்து தேவை அதிகரிக்க வாய்ப்புள்ளது. தற்போது எதிர்பார்த்த பருவமழை பெய்யாததால், வரும் ஆண்டு தேங்காய் வரத்து குறையும். எனவே, மீண்டும் கொப்பரை, தேங்காய், ஆயில், பவுடர் என அனைத்து விலைகளும் உயர வாய்ப்புள்ளது.
அரசு கொப்பரை கொள்முதல் செய்யாத நிலையில், வரும் காலங்களில் பண்டிகை உள்ளிட்ட நாட்களில் தேவை அதிகரிக்கும். மேலும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிலையில், வடமாநிலங்களுக்கும் அனுப்பும் போது, தேங்காய் தேவை அதிகரித்து விலை உயர மட்டுமே வாய்ப்புள்ளது.
தற்போது, ஒரு கிலோ சாதா கொப்பரை, 133 ரூபாய், ஸ்பெஷல் கொப்பரை, 135, உலர் கொப்பரை, 145 ரூபாய்க்கும்; தேங்காய் எண்ணெய் 15 கிலோ டின், 3,025 ரூபாய்; ஒரு டன் பச்சை தேங்காய், 45ஆயிரம் ரூபாய்; கருப்பு தேங்காய், 50 ஆயிரம் ரூபாய்க்கும்; பவுடர் ஒரு கிலோ, 200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஆயிரம் மட்டை, 3,500 ரூபாய், ஒரு டன் தொட்டி, 36,000 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. தற்போது விலை மெல்ல உயரும் சூழலில், இனி குறைய வாய்ப்பு இல்லை. எனவே, குறைந்த விலைக்கு தேங்காய் விற்க வேண்டாம்.
இவ்வாறு, கூறினார்.
