/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு; கழிவு நீர் கலப்பால் விவசாயிகள் வேதனை
/
நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு; கழிவு நீர் கலப்பால் விவசாயிகள் வேதனை
நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு; கழிவு நீர் கலப்பால் விவசாயிகள் வேதனை
நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு; கழிவு நீர் கலப்பால் விவசாயிகள் வேதனை
ADDED : மே 28, 2025 11:46 PM

சூலுார் : நொய்யல் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடினாலும், கழிவு நீர் கலந்து செல்வதால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
கோவை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால், நொய்யல் ஆற்றில் நீர் வரத்து அதிகரித்தது. மழை நீடித்ததால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
நேற்று முன்தினம் இரவு ராவத்தூர் தடுப்பணைக்கு வெள்ள நீர் வந்தது. தடுப்பணை நிறைந்து செங்கத்துறை, சோமனூர் வழியாக திருப்பூரை நோக்கி செல்கிறது.
இதனால், ஆற்றில் தேங்கியிருந்த கழிவு நீர் அடித்து செல்லப்படுகிறது. ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு ஒரு பக்கம் விவசாயிகளுக்கு மகிழ்ச்சி அளித்தாலும், மறுபக்கம் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தமிழக நொய்யல் விவசாயிகள் பாதுகாப்பு சங்க ஒருங்கிணைப்பாளர் திருஞானசம்பந்தம் கூறியதாவது: கொங்கு மண்டலத்தின் ஜீவ நதியாக இருந்த நொய்யல் ஆறு, இப்போது, கழிவு நீர் செல்லும் சாக்கடையாக மாற்றப்பட்டுள்ளது. பல தொழிற்சாலைகளின் கழிவுகள் நேரடியாக ஆற்றில் விடப்படுகிறது. மாநகராட்சிகள், நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகங்களே கழிவு நீரை ஆற்றில் விடுகின்றன.
இதனால், நொய்யல் கரையோர கிராமங்களில் உள்ள மக்கள் பலர் புற்றுநோய், சரும நோய் உள்ளிட்ட பல நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். மழை வெள்ளம் வரும் போது, அதை பயன்படுத்த முடியாமல் வீணாக செல்லும் நிலை உள்ளது.
இதனால் வழியோர கிராமங்களில் உள்ள விவசாயிகள் ஏமாற்றமடைந்து உள்ளனர். ஆற்றில் கழிவு நீர் விடுவதை அரசு தடுக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

