/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
திருவேங்கட நாத பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்
/
திருவேங்கட நாத பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்
ADDED : டிச 02, 2025 06:46 AM

அன்னுார்: சொக்கம்பாளையம் திருவேங்கடநாத பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.
சொக்கம்பாளையம், குப்பு செட்டி தோட்டத்தில், திருவேங்கடநாத பெருமாள் கோவில் 100 ஆண்டுகள் பழமையானது, இங்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேதர, திருவேங்கடநாத பெருமாள், கருடாழ்வார் ஆகியோர்களுக்கு தெய்வத் திருமேனிகள் நிறுவி, கர்ப்ப கிரகம், கோபுரம், அர்த்த மண்டபம் ஆகியவை கட்டி, பல லட்சம் ரூபாய் செலவில் திருப்பணி செய்யப்பட்டுள்ளது
இதையடுத்து கும்பாபிஷேக விழா கடந்த 29ம் தேதி மாலை யாகசாலை பிரவேசத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் காலை வேள்வி பூஜையும், மாலையில் பெருமாள் பிரதிஷ்டையும், எண் வகை மருந்து சாத்துதலும் நடந்தது.
நேற்று காலை 7:00 மணிக்கு திருவேங்கடநாத பெருமாள், கருடாழ்வார் மற்றும் கோபுரத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து பெருமாளுக்கு அபிஷேக பூஜை, அலங்கார பூஜை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. செட்டிபாளையம் பாண்டுரங்கன் குழுவின் பஜனை நடந்தது. அன்னுார், கோவை, ஊட்டி பகுதியிலிருந்து திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

