/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கிடப்பில் போடப்பட்ட மேட்டுப்பாளையம் பைபாஸ் சாலை; போக்குவரத்து நெரிசலால் அவதிப்படும் வாகன ஓட்டிகள்
/
கிடப்பில் போடப்பட்ட மேட்டுப்பாளையம் பைபாஸ் சாலை; போக்குவரத்து நெரிசலால் அவதிப்படும் வாகன ஓட்டிகள்
கிடப்பில் போடப்பட்ட மேட்டுப்பாளையம் பைபாஸ் சாலை; போக்குவரத்து நெரிசலால் அவதிப்படும் வாகன ஓட்டிகள்
கிடப்பில் போடப்பட்ட மேட்டுப்பாளையம் பைபாஸ் சாலை; போக்குவரத்து நெரிசலால் அவதிப்படும் வாகன ஓட்டிகள்
ADDED : டிச 02, 2025 06:39 AM

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் பைபாஸ் சாலை திட்டம் கிடப்பில் போடப்பட்டதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் தினமும் அவதிக்குள்ளாகின்றனர்.
சுற்றுலா தலமான நீலகிரி மாவட்டத்தின் நுழைவு வாயிலில் அமைந்துள்ள மேட்டுப்பாளையத்தில் சாலைகளில் ஆக்கிரமிப்புகள் இருப்பதாலும், வாகனங்கள் எண்ணிக்கை அதிகளவில் உள்ளதாலும், நகரில் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இந்த நெரிசலை போக்க, பல்வேறு கால கட்டங்களில் பைபாஸ் சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. ஆனால் இதற்கான திட்ட மதிப்பீடு ரூ.600 கோடியாக அதிகரித்ததால், 2021ம் ஆண்டு புதிதாக பொறுப்பேற்ற தமிழக அரசு, இவ்வளவு தொகையை ஒதுக்க முடியாது என, பைபாஸ் சாலை திட்டத்தை, மத்திய அரசிடம் ஒப்படைத்தது. மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளாக இத்திட்டத்திற்கு எவ்வித உயிரோட்டமும் கொடுக்காமல், உள்ளது.
அதனால் பைபாஸ் சாலை திட்டம் கிணற்றில் போட்ட கல்லை போன்று உள்ளது.
மேட்டுப்பாளையம் நகரில் காலை, மாலை நேரத்திலும், விடுமுறை நாட்களிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுகிறது.
சில மாதங்களாக காலையிலிருந்து இரவு வரை, தொடர்ந்து நகரில் போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் அணி வகுத்து நிற்கின்றன. நீலகிரி சீசன் மாதங்களில் போக்குவரத்து நெரிசல் உச்சத்தை தொடும். எனவே, மத்திய அரசு, காரமடை-ஊட்டி சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி நான்கு வழி சாலையாக மாற்ற தேசிய நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறுகையில்,' பைபாஸ் சாலை அமைய உள்ள இடம் குறித்து, விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய, டி.பி.ஆர்., விடப்படும் டெண்டரை எடுக்க, யாரும் முன் வராத காரணத்தால், மேட்டுப்பாளையம் பைபாஸ் சாலை திட்டம் நடைமுறைக்கு வராமல் உள்ளது.
இது குறித்து மத்திய உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளோம்,' என்றனர்.
மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, மேட்டுப்பாளையத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க, காரமடையில் இருந்து தென் திருப்பதி நால்ரோடு வழியாக, ஆலாங்கொம்பு வரை செல்லும் சாலையையும், சத்தியமங்கலம் சாலையையும் விரிவாக்கம் செய்து, பவானி ஆற்றில் ஒரு பாலம் அமைத்து, கோத்தகிரி சாலையில் இணையும் வகையில், பைபாஸ் சாலை திட்டம் தயார் செய்து அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதற்கான ஒப்புதலும், நிதியும் கிடைத்தால், உடனடியாக புதிய பைபாஸ் சாலை திட்டம் துவக்கப்படும்,' என்றனர்.

