வடமாநிலங்களில் சாயப்பட்டறைகளுக்கு 'சீல் வைப்பு' : சோமனூரில் துணி ரகங்கள் தேக்கம்
வடமாநிலங்களில் சாயப்பட்டறைகளுக்கு 'சீல் வைப்பு' : சோமனூரில் துணி ரகங்கள் தேக்கம்
ADDED : ஜூலை 02, 2026 04:08 AM

சோமனூர்: வட மாநிலங்களில் சாயப்பட்டறைகளுக்கு சீல் வைக்கப்பட்டதால், சோமனூரில் துணி ரகங்கள் தேக்கமடைந்துள்ளதால், விசைத்தறி ஜவுளித்துறையினர் விரக்தி அடைந்துள்ளனர்.
கோவை, திருப்பூர் மாவட்டங்களில், 2 லட்சம் விசைத்தறிகள் இயக்கப்படுகின்றன. 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறிய,பெரிய ஸ்பின்னிங் மில்கள் உள்ளன. சாதா மற்றும் நவீன ரக விசைத்தறிகளில் உற்பத்தியாகும் கிரே காடா ரக துணி ரகங்கள், வட மாநிலங்களுக்கு அனுப்பப்படுகின்றன. அங்கு, சாயம் ஏற்றுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு, பல வகையான ஆடைகள் தயாரிக்கப்படுகின்றன.
சோமனூர் பகுதியில் உற்பத்தி ஆகும், 80 சதவீத துணி ரகங்கள் ராஜஸ் தான் மற்றும் குஜராத் மாநிலங்களில் உள்ள தேஜ்பூர், பாலி, வதேரா உள்ளிட்ட நகரங்களில் உள்ள சாயப்பட்டறைகளில் சாயமேற்றப்பட்டு வந்தன.
இந்நிலையில், அங்குள்ள சாயப்பட்டறைகள் விதிகளை மீறி செயல்பட்டு வருவதை அறிந்த அம்மாநில அரசுகள், சாயப்பட்டறைகளுக்கு 'சீல்' வைத்து வருவதாக கூறப்படுகிறது. இதனால், துணிகளுக்கு சாயமேற்றும் பணி முற்றிலும் முடங்கியுள்ளதால், சோமனூர் சுற்றுவட்டார பகுதிகளில் உற்பத்தி செய்யப்பட்ட துணி வகைகள் தேக்கமடைந்து வருகின்றன.
இதுகுறித்து ஜவுளித்துறையினர் கூறியதாவது: துணி ரகங்கள் விற்றால் தான் அடுத்தடுத்து உற்பத்தியை செய்ய முடியும். சாயப்பட்டறைகள் மூடப்பட்டு வரும் பிரச்னையால், சோமனூர் பகுதியில் உற்பத்தியான பல கோடி மீட்டர் துணி ரகங்கள் குடோன்களில் தேங்கி கிடக்கின்றன. பஞ்சு விலையும் ஏற்ற, இறக்கத்துடன் உள்ளது. நூல் விலையும் குறைந்து வருகிறது.
துணிகள் தேங்கியுள்ளதால், உற்பத்தியை குறைத்துள்ளோம். மில்கள், விசைத்தறிகள், வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே இயக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வடமாநிலங்களில் சாயப்பட்டறை பிரச்னைக்கு தீர்வு ஏற்பட்டால் தான், துணி ரகங்களை வாங்க வியாபாரிகள் முன்வருவார்கள். அதுவரை உற்பத்தியை குறைப்பதை தவிர வேறு வழியில்லை.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
