சின்னவேடம்பட்டி ஏரியில் கழிவுநீர் ஓராண்டுக்குள் சுத்திகரிப்பு: கமிஷனர்
சின்னவேடம்பட்டி ஏரியில் கழிவுநீர் ஓராண்டுக்குள் சுத்திகரிப்பு: கமிஷனர்
ADDED : ஜூலை 09, 2026 06:42 AM
கோவை: சின்னவேடம்பட்டி ஏரியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் முடிவுக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
மாநகராட்சி கமிஷனர் ரவி தேஜா வெளியிட்டுள்ள அறிவிப்பில், குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர், சின்னவேடம்பட்டி ஏரியை மாசு படுத்தி வருகிறது.
திறந்தவெளி மற்றும் ஆழ்குழாய் கிணறில் பெறும் நீரை, குடிநீராக பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. ஏரி அருகே சுத்திகரிப்பு நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து வெளியேறும் நீரில் கிருமி நீக்கம் செய்யப்படும்.
மாசுகட்டுப்பாடு வாரியம் மூலம் நீரின் ரசாயன தன்மை கண்காணிக்கப்படும்.
சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து தினசரி வெளியேறும் சுமார் 50 லட்சம் லிட்டர் நீர், சின்னவேடம்பட்டி, விளாங்குறிச்சி, காளப்பட்டி, சின்னியம்பாளையம், நீலாம்பூர், சூலூர் வாய்க்காலில் சென்று விவசாய பாசனத்துக்கு பயனளிக்கும் வகையில் திட்ட மிடப்பட்டுள்ளது.
சுத்திகரிப்பு நிலைய பணிக்கு தடைகோரி, தொழிற்சாலைகள் சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
அதில், பணிகளை துவங்கி நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் பணிகளை ஓராண்டில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
