/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிறுதானிய இனிப்பு, காரத்துக்கு ரயில் பயணிகளிடம் பெரிய வரவேற்பு!
/
சிறுதானிய இனிப்பு, காரத்துக்கு ரயில் பயணிகளிடம் பெரிய வரவேற்பு!
சிறுதானிய இனிப்பு, காரத்துக்கு ரயில் பயணிகளிடம் பெரிய வரவேற்பு!
சிறுதானிய இனிப்பு, காரத்துக்கு ரயில் பயணிகளிடம் பெரிய வரவேற்பு!
ADDED : மார் 16, 2024 11:48 PM

கோவை ரயில்வே ஸ்டேஷனில், 'ஒன் ஸ்டேஷன் ஒன் புராடெக்ட் ஸ்டால்' திட்டத்தில் திறக்கப்பட்டுள்ள ஸ்வீட்ஸ் கடையில் விற்கப்படும் சிறுதானியத்தில் தயாரிக்கப்பட்ட இனிப்பு, காரம், பிஸ்கெட் மற்றும் குக்கீஸ் வகைகளை, ரயில் பயணிகள் விரும்பி வாங்கி செல்கின்றனர்.
இந்தியா முழுவதும், 'ஒன் ஸ்டேஷன் ஒன் புராடெக்ட் ஸ்டால்' திட்டத்தை, பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் காணொலி வாயிலாக துவக்கி வைத்தார்.
இந்த திட்டத்தில் கோவை, கோவை வடக்கு, காரமடை, மேட்டுப்பாளையம், போத்தனுார், பிளமேடு ஆகிய ரயில்வே ஸ்டேஷன்களில், 'ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு கடைகள்' திறக்கப்பட்டுள்ளன. கோவை ரயில்வே ஸ்டேஷனில் திறக்கப்பட்டுள்ள இந்த கடையில் ராகி, கம்பு, தினை, வரகு உள்ளிட்ட சிறுதானியங்களில் தயாரிக்கப்பட்ட, 30க்கு மேற்பட்ட ஸ்வீட்ஸ், காரம், குக்கீஸ் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
கறிவேப்பிலை, முருங்கை கீரை உள்ளிட்ட கீரைகளில் தயாரிக்கப்பட்ட பிஸ்கெட்களும், கவுனி அரிசியில் தயாரிக்கப்பட்ட முறுக்கு வகைகளும், சுவையில் அசத்துகின்றன. கோவை வரும் வட மாநில ரயில் பயணிகள் பலர், இவற்றை விரும்பி வாங்கிச் செல்கின்றனர்.
இது குறித்து, கடை நிர்வாகி பிரவீன் கூறுகையில், ''சிறுதானிய உணவின் நன்மைகள் பற்றி பிற மாநில மக்கள் நன்றாக தெரிந்து வைத்துள்ளனர். சிறுதானியங்களின் பெயர்களை சொல்லி, அந்த தயாரிப்புகளை விரும்பி வாங்கி செல்கின்றனர்.
ஆனால் அதன் பயன்கள் இங்குள்ள மக்களுக்கு இன்னும் தெரியவில்லை. கடை திறந்த இந்த ஒரு வாரத்தில் நல்ல வியாபாரம் நடந்துள்ளது.
சிறுதானிய இனிப்பு வகைகள் ஒரு கிலோ, 500 முதல் 800 ரூபாய் வரையும், கார வகைகள் 400 முதல் 500 ரூபாய் வரையும் விற்பனை செய்யப்படுகிறது. 100 கிராம் 200 கிராம் பாக்கெட்களும் உள்ளன,'' என்றார்.

