/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கரையேறவிட்டக்குப்பத்தில் அப்பர் கரையேறும் விழா
/
கரையேறவிட்டக்குப்பத்தில் அப்பர் கரையேறும் விழா
ADDED : ஏப் 26, 2024 11:34 PM

கடலுார் : கடலுார் அருகே கரையேறவிட்டக்குப்பத்தில் அப்பர் கரையேறும் விழா நடந்தது.
தமிழகத்தை ஆண்ட மகேந்திரவர்ம பல்லவ மன்னர், திருநாவுக்கரசர் என்னும் அப்பர் அடிகளாரை கருங்கல்லில் கட்டி, கடலில் வீசினார். அப்போது நமச்சிவாய பதிகம் பாடி, அந்த கல்லையே தெப்பமாக கொண்டு அப்பர் கரை சேர்ந்தார் என்பது ஐ தீகம் அந்த இடம் தான் கடலுார் அடுத்த புதுவண்டிப்பாளையம் கரையேறவிட்டக்குப்பம். அப்பர் கரையேறிய இந்த இடத்தில் அவருக்கு தனியாக கோவில் அமைக்கப்பட்டு வருகிறது.
இக்கோவிலில் பிரதிஷ்டை செய்வதற்காக 1.5 டன் எடையுள்ள அப்பர் சிலை, கல்லால் ஆன கயிறு மூலம் சுற்றப்பட்ட வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இச்சிலை கடந்த 24ம் தேதி கிரேன் மூலம் அப்பர் கரையேறிய குளத்தில் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து. நேற்று அப்பர் கரையேறும் ஐதீக விழா நடந்தது.
விழாவையொட்டி, கடலுார், திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் இருந்து விநாயகர், அப்பர், பெரியநாயகி உடனுறை பாடலீஸ்வரர் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி தேரடி தெரு, வண்டிப்பாளையம் மெயின்ரோடு வழியாக கரையேறவிட்டகுப்பத்திற்கு வந்தார். அப்போது, பாடலீஸ்வரருக்கு பூரண கும்ப வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து, அப்பர் தெப்பத்தில் 9 முறை வலம் வந்து, கரையேறி அங்குள்ள மண்டபத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து அப்பருக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. இதையடுத்து முக்கிய வீதிகள் வழியாக சென்று வாகீசர் மண்டகப்படியில் சிறப்பு பூஜை நடந்தது. அதன்பிறகு பாடலீஸ்வரர், பெரியநாயகி, விநாயகர் சுவாமிகள், அப்பருடன் திருப்பாதிரிப்புலியூர் கோவிலை சென்றடைந்தனர். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

