/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சென்னை - கடலுார் புதிய ரயில்பாதை திட்டத்திற்கு... கூடுதல் செலவு; புதுச்சேரி அரசு ஏற்கவில்லை என ரயில்வே துறை விளக்கம்
/
சென்னை - கடலுார் புதிய ரயில்பாதை திட்டத்திற்கு... கூடுதல் செலவு; புதுச்சேரி அரசு ஏற்கவில்லை என ரயில்வே துறை விளக்கம்
சென்னை - கடலுார் புதிய ரயில்பாதை திட்டத்திற்கு... கூடுதல் செலவு; புதுச்சேரி அரசு ஏற்கவில்லை என ரயில்வே துறை விளக்கம்
சென்னை - கடலுார் புதிய ரயில்பாதை திட்டத்திற்கு... கூடுதல் செலவு; புதுச்சேரி அரசு ஏற்கவில்லை என ரயில்வே துறை விளக்கம்
ADDED : டிச 09, 2025 06:59 AM

கடலுார்: சென்னையில் இருந்து புதுச்சேரி வழியாக கடலுாருக்கு புதிய கடற்கரையோர ரயில் பாதை திட்டத்தில், ரயில் வழித்தடத்தை மாற்ற கோரிய புதுச்சேரி அரசு, அதற்கான கூடுதல் செலவை ஏற்க மறுத்துவிட்டதாக மத்திய ரயில்வே துறை விளக்கம் அளித்துள்ளது.
சென்னையில் இருந்து மகாபலிபுரம், புதுச்சேரி வழியாக கடலுார் வரை, ரயில் பாதை அமைக்க ரயில்வே துறை முடிவு செய்து, கடந்த 2007ம் ஒப்புதல் அளித்தது. 179.2 கி.மீ., துாரத்திற்கு, ரயில் பாதை அமைக்க, 2008ல், திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டது. 2010--2011ம் ஆண்டு ஆரம்பக் கட்ட சர்வே நடத்தப்பட்டது. இது குறித்து தெளிவான ஆய்வுப் பணியை, தெற்கு ரயில்வே கட்டுமானத் துறை மேற்கொண்டது.
அதில் சோழிங்கநல்லுார், மாமல்லபுரம், புதுச்சேரி வழியாக கடலுாருக்கு ரயில் பாதை அமைக்க சாத்தியக்கூறு இருப்பதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். மாமல்லபுரம், கல்பாக்கம், மரக்காணம், வேல்ராம்பட்டு ஏரிக்கரை, பாகூர் வழியாக கடலுாருக்கு ரயில் பாதை அமைக்க திட்டமிடப்பட்டு, திட்ட மதிப்பீடும் தயாரிக்கப்பட்டது. சென்னை - புதுச்சேரி இடையே சர்வே பணி 80 சதவீதவீம் முடிந்தது.
பின், புதுச்சேரி- கடலுார் வரையிலான 22 கி.மீ., துார ரயில் பாதைக்கு சர்வே செய்யப்பட்டது. ஆனால், ரயில் பாதை குறுக்கிடும் இடங்களை மறு ஆய்வு செய்ய, ரயில்வே துறைக்கு புதுச்சேரி மாநில அரசு கோரிக்கை விடுத்தது. அதனையும் ஏற்ற ரயில்வே நிர்வாகம் சர்வே பணியை முடித்து, கடந்த 2018ம் ஆண்டு புதுச்சேரியில் காங்., ஆட்சியின்போது இத்திட்டத்தை மீண்டும் கிடப்பில் போட்டது.
இந்த திட்டம் நிறைவேற்றப்படுமாயின் ரயில் பயண நேரம் குறைவதுடன், கடலுாரில் இருந்து விழுப்புரம் வழியாக 60 கி.மீ., துாரம் சுற்றி செல்லும் பயண துாரம் குறையும். கிழக்கு கடற்கரை சாலையில் வாகன போக்குவரத்து குறையும், வாகன நெரிசலும் தவிர்க்கப்படும். கடலுார் மற்றும் புதுச்சேரியில் இருந்து தினசரி சென்னைக்கு செல்லும் பணியாளர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு இத்திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மரக்காணம், புதுச்சேரி, கடற்கரையோரங்களில் உள்ள நகரங்களில் சுற்றுலா பயணி கள் வருகை அதிகரித்து வருவாய் பெருகும்.
இது குறித்து கடலுார் எம்.பி., விஷ்ணுபிரசாத் லோக்சபாவில் கேள்வி எழுப்பினார். அது தொடர்பாக மத்திய ரயில்வே நிர்வாகம் நீண்ட விளக்கமளித்துள்ளது. அதில், ரயில் பாதை திட்டத்தின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் பாதை திசையை மாற்ற வேண்டும், கூடுதலாக புதுச்சேரி - கடலுார் இடையே இரட்டை ரயில் பாதை அமைக்க வேண்டும் என புதுச்சேரி அரசு கேட்டது.
இந்த மாற்றங்களால் திட்டத்தின் மொத்த செலவு அதிகரிக்க வேண்டியதாயிற்று. எனவே, ரயில்வே துறை அந்த கூடுதல் செலவை புதுச்சேரி மாநில அரசு ஏற்க வேண்டும் என தெரிவித்தது.
ஆனால், புதுச்சேரி அரசு, கூடுதல் செலவை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்தது.
இதன் காரணமாக, திட்டம் முன்னேற்றமின்றி நிற்கிறது. அதனால், திட்டம் தற்போது செயல்பாடின்றி உள்ளது. புதுச்சேரி மாநில அரசு கூடுதல் செலவை ஏற்காத நிலையில், திட்டத்தை முன்னேற்ற முடியவில்லை.
இதை வரும் ஆண்டில் எடுத்துக்கொள்வது குறித்து எந்த உறுதியும் வழங்கப்படவில்லை என விளக்கமளித்துள்ளது.
இதனால் தான் இந்த கடலுார் - புதுச்சேரி - சென்னை ரயில்பாதை திட்டம் கிணற்றில் போட்ட கல்லாய் உள்ளது.

