குறுவை சிறப்பு திட்ட மானியம் சாகுபடி நிலபரப்பு அதிகரிக்க விவசாயிகள் கோரிக்கை
குறுவை சிறப்பு திட்ட மானியம் சாகுபடி நிலபரப்பு அதிகரிக்க விவசாயிகள் கோரிக்கை
ADDED : ஜூலை 06, 2026 03:40 AM
காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் வட்டாரத்திற்கு குறுவை சிறப்பு திட்ட மானியம் சாகுபடி பரப்பு அளவு அதிகரிக்க வேண்டும் என விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து கொள்ளிடம் கீழணை பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் விநாயகமூர்த்தி, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமாருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில்; உழவர் நலத்துறை குறுவை சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு, குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம் மூலம் மானியத் தொகையாக ஏக்கர் ஒன்றுக்கு ரூ.4,000 வழங்குகிறது.
காட்டுமன்னார்கோவில் டெல்டா பகுதியில் ஆழ்துளை கிணறு பாசனம் மூலம் 8,000 ஏக்கர் பரப்பில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
ஆனால் வேளாண் துறை குறைந்த அளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளதாக கணக்கீடு செய்துள்ளது.
காட்டுமன்னார்கோயில் வட்டாரத்தில் 3,000 ஏக்கருக்கு மட்டுமே மானிய தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் காவிரி தண்ணீர் பாசனம் இல்லாத ஸ்ரீமுஷ்ணம் வட்டாரத்திற்கு 8,000 ஏக்கருக்கு மானியத் தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
காவிரி தண்ணீர் பாசனம் பெறும் காட்டுமன்னார்கோவில் வட்டாரத்திற்கு குறைந்த அளவு ஒதுக்கீடும், காவிரி தண்ணீர் பாசனம் இல்லாத ஸ்ரீமுஷ்ணம் வட்டாரத்திற்கு அதிக மானிய தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டது, விவசாயிகளுக்கு ஒரு கண்ணில் வெண்ணையும், மறு கண்ணில் சுண்ணாம்பு வைப்பது போல் உள்ளது.
இந்த ஆண்டு காட்டுமன்னார்கோவில், சிதம்பரம் டெல்டாவில் குறுவை சாகுபடி பரப்பளவு அதிகப்படுத்தப்பட்டுள்ளது.
எனவே, காட்டுமன்னார்கோவில் வட்டாரத்திற்கு குறுவை சிறப்பு தொகுப்பு திட்ட மானியம் ஒதுக்கீடை அதிகரிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
