தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/12 ஆண்டுகளாக பத்தாம் வகுப்பு அரசு பொது தேர்வில் தொடர் சாதனை புரிந்து வரும் கீழ்மாம்பட்டு அரசு பள்ளி

12 ஆண்டுகளாக பத்தாம் வகுப்பு அரசு பொது தேர்வில் தொடர் சாதனை புரிந்து வரும் கீழ்மாம்பட்டு அரசு பள்ளி

12 ஆண்டுகளாக பத்தாம் வகுப்பு அரசு பொது தேர்வில் தொடர் சாதனை புரிந்து வரும் கீழ்மாம்பட்டு அரசு பள்ளி


ADDED : அக் 31, 2026 04:17 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 31, 2026 04:17 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நம்ம பள்ளி;நம்ம வாத்தியார் பகுதிக்கு400 பேப்பர்

கடலுார் மாவட்டம்,பண்ருட்டி வட்டம் கீழ்மாம்பட்டு கிராமத்தில் 2011 ம் ஆண்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தொடங்கப்பட்டு சிறப்பாக நடந்து வந்தது.இப்பள்ளி கடந்த 2011 ம் ஆண்டு பொதுமக்கள் ஒத்துழைப்புடன் அரசு உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இப்பள்ளி இன்று வரை மாவட்ட அளவில் சிறப்பான பள்ளியாக செயல்பட்டு வருகிறது. கீழ்மாம்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட சுற்று வட்டார கிராமத்தினை சேர்ந்த 200 மாணவர்கள் சிறப்பான முறையில் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் 20 க்கும் மேற்பட்டோர் பணி புரிந்து வருகின்றனர்.

இப்பள்ளி மாணவர்கள் அரசு நடத்தும் கலைத் திருவிழா, அறிவியல் கண்காட்சி, விளையாட்டு போட்டிகளில் பங்கு பெற்று பல பரிசுகளை பெற்று வருகின்றனர். மேலும் இப்பள்ளியில் படித்த பல மாணவர்கள் அரசுத்துறை மற்றும் தனியார் துறைகளில் பல்வேறு உயர் பதவிகளில் பணி புரிந்து வருவது இப்பள்ளிக்கு பெருமையாகும்.

பள்ளியின் சாதனைகள்:



இப்பள்ளி, 10ம் வகுப்பு பொதுதேர்வில் கடந்த 12 ஆண்டுகளாக தொடர்ந்து 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்து வருகிறது. கடந்த ஆண்டு நடந்த பொதுத் தேர்வில் மாணவர் கலைக்கண்ணன் 483 மதிப்பெண் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் அரசு நடத்தும் போட்டித்தேர்வுகளில் இப்பள்ளி மாணவர்கள் அதிகளவு தேர்ச்சி பெற்று வருகின்றனர். 2025–2026ம் ஆண்டு நடந்த முதல்வர் திறனாய்வு தேர்வில் மாவட்ட அளவில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களில் இப்பள்ளி மாணவர்கள் 12 பேர் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

மாணவர்களின் சைக்கிள் நிறுத்திட ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் பங்களிப்புடன் ரூ.ஒரு லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் ெஷட் கட்டப்பட்டுள்ளது.

மாணவர்களின் முன்னேற்றத்திற்காக

ஆசிரியர்கள் அர்பணிப்பு;

இப்பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் மாணவர்களின் நலன் மற்றும் அவர்களின் எதிர் காலத்தினை கருத்தில் கொண்டு அயராது உழைத்து வருகின்றனர். எங்கள் பள்ளி மாணவர்களுக்கு ஒழுக்கத்துடன் கூடிய கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. அதன் காரணமாக, மாணவர்கள் 10ம் வகுப்பு பொது தேர்வில் கடந்த 12 ஆண்டுகளாக 100 சதவீதம் தேர்ச்சி பெற்று பள்ளிக்கும், ஆசிரியர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளனர். மேலும், மாணவர்கள் அரசு போட்டி தேர்வுகளில் பங்கேற்க ஆசிரியர்கள் ஊக்கப்படுத்தி வருவதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

சக்கரவர்த்தி,

தலைமை ஆசிரியர்;

மாணவர்களின் கல்வி தரமே

எங்களின் தாரக மந்திரம்;

கடந்த 10 ஆண்டுகளாக இப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவராக உள்ளேன். இப்பள்ளி மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கும், பள்ளியின் வளர்ச்சிக்கும் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் அனைத்து ஆசிரியர்களுடன் இணைந்து பாடுபட்டு வருகிறேன். மாணவர்களின் படிப்பிற்கு தேவையான என்னால் இயன்ற உதவி மற்றும் ஆலோசனைகளை வழங்கி வருகிறேன். மேலும் ஊர்பொதுமக்களின் ஒத்துழைப்புடன் மாணவர்கள் கல்வி தரம் உயர்த்திடவும், பள்ளியின் வளர்ச்சிக்காகவும் பாடுபட்டு வருகிறேன்.

ஜெயராமன்,

பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர்;

மேல்நிலைபள்ளியாக

தரம் உயர்த்த வேண்டும்

இப்பகுதியை சுற்று வட்டார கிராமப்புற மாணவர்களின் கல்வி அறிவினை மேம்படுத்திட பொதுமக்கள் ஒத்துழைப்புடன் இப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்திட பாடுபட்டு வருகிறேன். இப்பள்ளி மற்றும் மாணவர்களின் வளர்ச்சிக்காக என்னால் இயன்ற உதவிகளை செய்து, பள்ளியின் மேம்பாட்டிற்காக பாடுபட்டு வருகிறேன். இப்பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களின் கல்வி தரத்தினை உயர்த்திட கடுமையாக உழைத்து வருகின்றனர். அனைத்து ஆசிரியர்களையும் மனதார பாராட்டுகிறேன்.

உத்திரகுமாரன்,

ஊராட்சி முன்னாள் தலைவர்.

மாணவர்களின் வளர்ச்சியே

நாட்டின் வளர்ச்சி

எங்கள் பள்ளியின் வளர்ச்சிக்காக அனைத்து ஆசிரியர்களும் நேரம் பாராமல் கடுமையாக உழைத்து வருகின்றனர். மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு என்னால் இயன்ற உதவிகளை செய்து வருகிறேன் .மாலைநேர சிறப்பு வகுப்பில் ஆசிரியர்களுடன் இணைந்து முழுகவனம் செலுத்தி வருகிறேன்.மாணவர்கள் மாலை நேர சிறப்பு வகுப்பில் சோர்வு ஏற்படாமல் இருக்க சிற்றுண்டி வழங்கி வருகிறேன். மாணவர்களின் கல்வி வளர்ச்சியே, நாட்டின் வளர்ச்சி என்பதற்கேற்ப எங்கள் பள்ளி மாணவர்கள் படிப்பில் முழுகவனம் செல்லுத்தி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.

கோடீஸ்வரி குமரவேல்,

பள்ளி மேலாண்மைக்குழு தலைவர்;

மாணவர்களின் முன்னேற்றத்திற்கு

உயர்கல்விக்கு வழிகாட்டுகிறேன்

எங்கள் பள்ளி மாணவர்கள் தமிழில் அதிக அளவில் புலமை பெற்றவர்களாக உருவாக்கி வருகிறேன். மாணவர்களின் திறனை வெளியில் கொண்டு வரும் நோக்கில் அரசு போட்டி தேர்வுகளில் பங்கேற்க ஆர்வமூட்டி வருகிறேன். மாணவர்களின் எதிர்கால உயர்கல்வியை கருத்தில் கொண்டு, உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியராக இருந்து பயிற்சி அளித்து வருகிறேன்.

தங்கவேலு,

தமிழாசிரியர்;

போட்டி தேர்வுகளை

எதிர்கொள்ள பயற்சி

தற்போதுள்ள போட்டி உலகில் மாணவர்கள் கணித பாடத்தின் அவசியம் அதிகமாக உள்ளது. அதனடிப்படையில் எங்கள் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு கணித பாடத்தின் அவசியத்தினை விளக்கி இப்பாடத்தில் திறமைமிக்கவர்களாக உருவாக்கி வருகிறேன். போட்டி தேர்வுகளில் வெற்றி பெறுபவர்களே அதிகளவு அரசு பணிக்கு செல்கின்றனர். அதனால் எனது மாணவர்கள் போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் புதிர் கணக்குகளை கற்று கொடுத்து வருகிறேன்.

ஞானசேகரன்.

கணித ஆசிரியர்;

அறிவியல் கண்காட்சியில்

மாவட்ட அளவில் சாதனை

எங்கள் பள்ளி காற்றோட்டமான சுற்றுசூழலில் அமைந்த பள்ளி. எங்கள் மாணவர்கள் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சிகளில் பங்கேற்று பல பரிசுகளை பெற்றுள்ளனர். கடந்த கல்வி ஆண்டு அரசு பொதுதேர்வில் மாணவன் கலைக்கண்ணன் அறிவியல் பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார்.

சுந்தரபாண்டியன்;

அறிவியல் ஆசிரியர்;

போட்டி தேர்வுகளில் பங்கேற்க

மாணவர்கள் ஊக்குவிப்பு ;

இப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் கிராம பகுதியை சேர்ந்தவர். அதனால் மாணவர்களுக்கு எளிதில் புரியும் வகையில் அனைத்து ஆசிரியர்களும் பாடம் நடத்தி வருகிறோம். கடந்த கல்வி ஆண்டு அரசு பொதுதேர்வில் சமூக அறிவியல் பாடத்தில் 4 மாணவர்கள் 100க்கும் 100 மதிப்பெண் பெற்று பள்ளிக்கும், ஆசிரியர்களுக்கும் பெருமை சேர்த்தனர். மாவட்ட அளவில் நடக்கும் அனைத்து போட்டிகளில் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று, சாதித்து வருகின்றனர். மேலும், மாணவர்ககளை, போட்டி தேர்வுகளில் பங்கேற்க ஊக்கப்படுத்தி வருகிறேன்.

தாமோதரன்,

பட்டதாரி ஆசிரியர்.

புதிய கண்டுபிடிப்புகளில்

மாணவர்கள் ஆர்வம்

எங்கள் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தொலை நோக்கு அறிவியல் சிந்தனையை ஊக்கும் விக்கும் வகையில் மாணவர்கள் சந்தேகங்களுக்கு அறிவியல் ஆசிரியர் என்ற முறையில் செய்முறையில் விளக்கம் அளித்து, மாணவர்களுக்கு தெளிவுப்படுத்தி வருககிறேன். மாணவர்கள் மேற்படிப்புக்கு செல்லும் போது ஆய்வக பயன்பாடு நன்று கற்று செல்ல வேண்டும் என்ற நோக்கில் மாணவர்களுக்கு ஆய்வகத்தில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மாணவர்கள் புதிய அறிவியல் கண்டு பிடிப்புகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பதை பெருமையாக தெரிவித்துக்கொள்கிறேன்.

சரவணன்,

மூத்த ஆசிரியர், (அறிவியல்);

ஆங்கில புலமைக்கு

சிறப்பு பயிற்சி

எங்கள் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள் ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மாணவர்களின் கல்வி தரத்தினை உயரத்திட அனைத்து ஆசிரியர்களும் தனிகவனம் செலுத்தி வருகிறோம். மாணவர்களின் உடல் திறனை மேம்படுத்திட அனைத்து விளையாட்டுகளிலும் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

கார்த்திகேயன்;

ஆங்கில ஆசிரியர்;

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us