/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
வெடி விபத்தில் 3 பெண்கள் பலி; பட்டாசு குடோன் உரிமையாளர் கைது
/
வெடி விபத்தில் 3 பெண்கள் பலி; பட்டாசு குடோன் உரிமையாளர் கைது
வெடி விபத்தில் 3 பெண்கள் பலி; பட்டாசு குடோன் உரிமையாளர் கைது
வெடி விபத்தில் 3 பெண்கள் பலி; பட்டாசு குடோன் உரிமையாளர் கைது
ADDED : பிப் 26, 2025 07:26 AM
கம்பைநல்லுார்: கம்பைநல்லுார் அருகே, பட்டாசு குடோன் வெடி விபத்தில், 3 பெண்கள் பலியான சம்பவத்தில், குடோர் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லுார் அடுத்த பூமிசமுத்திரத்திலுள்ள பட்டாசு குடோனில், நேற்று முன்தினம் கம்பைநல்லுார் அம்பேத்கர் நகரை சேர்ந்த திருமலர், 32, திருமஞ்சு, 30, செண்பகம், 33, ஆகிய, 3 பேர், வெடி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, திடீரென வெடிகள் வெடித்ததில் மூன்று பேரும், உடல் சிதறி பலியாகினர். சம்பவ இடம் வந்த தர்மபுரி எஸ்.பி., மகேஸ்வரன் விசாரணை மேற்கொண்டார்.
கம்பைநல்லுார் வி.ஏ.ஓ., கிருபாகரன், 30, கம்பைநல்லுார் போலீசில் புகார் அளித்தார். அதில், பட்டாசு தயாரிக்கும் போது மேற்பார்வையாளர் இல்லாமல், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையை பின்பற்றாமல் பணியாட்களை பணியாற்ற அனுமதித்ததால், விபத்து நடந்ததாகவும், மேற்படி, அஜாக்கிரதை மற்றும் கவனக்குறைவாக பட்டாசு ஆலையில், ஆட்களை வேலை வாங்கிய பூமிசமுத்திரத்தை சேர்ந்த பட்டாசு குடோன் உரிமையாளர் சின்னதுரை, 60, என்பவர் மீது நடவடிக்கை எடுக்க கூறியிருந்தார். இதையடுத்து, சின்னதுரை மீது, 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார், நேற்று அவரை கைது செய்தனர்.
வெடி விபத்தில் பலியான திருமலர், திருமஞ்சு மற்றும் செண்பகம் ஆகியோரின் உடல்கள், தர்மபுரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்து, நேற்று கம்பைநல்லுாருக்கு கொண்டு வரப்பட்டன. திருமலர், திருமஞ்சு உடல்கள் கம்பைநல்லுார் ஆற்றங்கரை மயானத்திலும், செண்பகம் உடல் வெதரம்பட்டியிலும் தகனம் செய்யப்பட்டன. அரூர் டி.எஸ்.பி., கரிகால் பாரிசங்கர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
வெடி விபத்து சம்பவத்தை தொடர்ந்து, தர்மபுரி ஆர்.டி.ஓ., காயத்ரி தலைமையிலான குழுவினர் நேற்று, கம்பைநல்லுாரில் உள்ள பட்டாசு குடோன் மற்றும் பட்டாசு விற்பனை நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, உரிய விதிகளின் படி, செயல்படுகிறதா என்பது குறித்தும், தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு குறித்தும் ஆய்வு செய்தனர்.

