கடன் பெற்று தருவதாக மோசடி 'சஸ்பெண்ட்' அதிகாரி கைது
கடன் பெற்று தருவதாக மோசடி 'சஸ்பெண்ட்' அதிகாரி கைது
ADDED : ஜூலை 06, 2026 02:48 AM
தர்மபுரி: தர்மபுரி, ஒடசல்பட்டியைச் சேர்ந்தவர் தீபா, 40. கூலித்தொழிலாளி. இவரது கணவர், 2012ல் இறந்ததால், முதல்வரின் தனி பிரிவை தொடர்பு கொண்டு, வீட்டுமனை வழங்க, கோரிக்கை விடுத்திருந்தார்.
ஜூன், 24ல், மருக்காலம்பட்டியைச் சேர்ந்த வீரபெருமாள், 43, தீபாவை தொடர்பு கொண்டார். அதில், 'தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் இருந்து பேசுகிறேன். மாடு வாங்குவதற்கான வங்கி கடனாக, 4.20 லட்சம் ரூபாய் உங்களுக்கு வந்துள்ளது. கடனை பதிவு செய்ய, 2,500 ரூபாய், ஜாமின் கையெழுத்து போடுபவருக்கு, 20,000 ரூபாய் கொடுக்க வேண்டும்' என்றார்.
தீபா, 7,500 ரூபாயை, வீரபெருமாள் வங்கி கணக்குக்கு அனுப்பினார். மறுநாள், 15,000 ரூபாயை, கலெக்டர் அலுவலகத்தில் வைத்து கொடுத்தார்.
அதன்பின், வீரபெருமாள் குறித்து விசாரித்தபோது, அவர் பலரிடம் இதுபோன்று மோசடியில் ஈடுபட்டதும், பாப்பிரெட்டிப்பட்டி வேளாண் கூட்டுறவு வங்கியில் இளநிலை உதவியாளராக இருந்து, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டவர் என்பதும் தெரிந்தது. புகாரில், தர்மபுரி போலீசார், நேற்று முன்தினம் வீரபெருமாளை கைது செய்தனர்.
