புலி, வனவிலங்குகள் கணக்கெடுப்புக்கு 430 கேமராக்கள் பொருத்தம்
புலி, வனவிலங்குகள் கணக்கெடுப்புக்கு 430 கேமராக்கள் பொருத்தம்
ADDED : ஜூலை 01, 2026 12:44 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் புலி, வனவிலங்குகள் கணக்கெடுப்புக்கு 7 சரகங்களிலும் சேர்த்து 430 சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்துவதற்கான ஆயத்த பணிகள் துவங்கி உள்ளது.
ஆண்டுதோறும் பருவமழைக்கு முந்தைய, பிந்தைய வன விலங்கு கணக்கெடுப்பு பணி நடப்பது வழக்கம். அதன்படி ஆண்டுக்கு ஒருமுறை தானியங்கி கேமரா மூலமாக புலிகள் கணக்கெடுப்பு நடக்கிறது. ஆனைமலை, மேகமலை ஸ்ரீவில்லிபுத்துார் புலிகள் காப்பக பகுதிகளில் புலிகள் நடமாட்டத்தை கணக்கெடுக்கவும், புலிகள் காப்பக பகுதிகளை ஒட்டிய மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் வன விலங்குககளின் நடமாட்டத்தை கண்காணித்து அதன் அடர்த்தி, எண்ணிக்கையை கணக்கிடவும் வனத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
அதன்படி திண்டுக்கல் மாவட்ட வனத்துறையின் கீழ் உள்ள கன்னிவாடி, நத்தம், சிறுமலை, வத்தலகுண்டு, ஒட்டன்சத்திரம், அய்யலுார், அழகர்கோயில் ஆகிய 7 சரகங்களிலும் வனவிலங்குகள், புலி வாழிடங்களுக்கான சாத்தியக்கூறுகளை கண்டறிய வனப்பகுதிகளில் சி.சி.டி.வி., கேமரா பொருத்தும் ஆயத்தப்பணிகள் துவங்கி உள்ளன.
முதற்கட்டமாக வனத்துறை அதிகாரிகள், களப்பணியாளர்களுக்கான பயிற்சிகள் நடந்தது. தொடர்ந்து வனப்பகுதியில் கேமராக்கள் பொருத்துவதற்குரிய இடங்கள், தேர்வு செய்யும் பணி நடக்கிறது. வனவிலங்குகள் நடமாட்டம், வாழ்விடம், அவற்றின் சூழல் சுற்றுப்பாதை ஆகியவற்றை கருத்தில் கொண்டு மாவட்டத்தில் 7 வனச்சரகங்களில் 403 இடங்களில் முதற்கட்டமாக 430 சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து முதற்கட்ட, இரண்டாம் கட்ட வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணிகளுக்கு பின் தரவுகள் ஆய்வு செய்யப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
