பெயரளவில் நடந்த குறைதீர் கூட்டம்: விவசாயிகள் ஏமாற்றம்
பெயரளவில் நடந்த குறைதீர் கூட்டம்: விவசாயிகள் ஏமாற்றம்
ADDED : ஜூலை 01, 2026 12:42 AM
கொடைக்கானல்: கொடைக்கானலில் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொள்ளாமல் கடை நிலை ஊழியர்கள் மூலம் பெயரளவிற்கு நடந்த குறைதீர் கூட்டத்தால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
வழக்கமாக விவசாயிகள் குறைதீர் கூட்டம் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்து வந்தது. மாவட்ட அளவில் கூட்டம் நடப்பதால் மலைப்பகுதி விவசாயிகளின் குறைகளை எளிதில் கூற முடியாத நிலை இருந்தது.
தொலைதுார மலைக்கிராம விவசாயிகளின் பிரச்னைகள் வெளிவராத சூழல் இருந்தது. இதை தவிர்க்க கொடைக்கானலில் குறைதீர் கூட்டம் நடத்த விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
தொடர்ந்து அப்போதைய ஆர்.டி.ஓ., சுரேந்திரன் முயற்சியால் சில ஆண்டுகளாக கொடைக்கானலில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்து வருகிறது. துவக்கத்தில் விவசாயிகளுக்கு பலனளித்த இக்கூட்டம் தற்போது திசைமாறி உள்ளது. சமூக ஆர்வலர்கள், கட்சி அமைப்பினர் உள்ளிட்ட விவசாயிகள் சாராதவர்கள் சுயநல பிரச்னைகளை முன்வைத்து கூட்டத்திற்கு இடையூறு ஏற்படுத்துகின்றனர்.
நேற்று நடந்த கூட்டத்தில் சில நபர்கள் நேர விரயத்தை ஏற்படுத்தி விவசாயிகளுக்கு பேச வாய்ப்பளிக்கவில்லை. துறை சார்ந்த அதிகாரிகளும் கலந்து கொள்ளாமல் கடை நிலை ஊழியர்கள் பெயரளவிற்கு கலந்து கொண்டதால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், 'குறைதீர் கூட்டத்தில் நாங்கள் தெரிவிக்கும் பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் அளிக்காது தனி நபர்களின் துதி பாடலுக்கு அதிகாரிகள் இசைவு காட்டுகின்றனர். விவசாயிகளின் பிரச்னைகளுக்கு சரிவர தீர்வு ஏற்படுத்துவதில்லை. கூட்டம் நடப்பது குறித்தோ, அரசின் விவசாயம் சார்ந்த நலத்திட்டங்கள் குறித்தோ முறையாக தெரிவிப்பதில்லை.
குறைதீர் கூட்டத்திற்கு மாவட்ட அளவிலான அதிகாரிகளை நியமித்து கூட்டம் முறையாக நடக்கவும், விவசாயிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கூட்டமாக நடத்தவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
