சேதமான ரோடுகள்; எரியாத தெருவிளக்குகள் அவதிப்படும் கோதைமங்கலம் ஊராட்சி மக்கள்
சேதமான ரோடுகள்; எரியாத தெருவிளக்குகள் அவதிப்படும் கோதைமங்கலம் ஊராட்சி மக்கள்
ADDED : ஜூலை 01, 2026 12:46 AM

பழநி: சேதமடைந்த ரோடுகள், எரியாத தெருவிளக்குகள், ரோட்டில் குவிந்துள்ள குப்பையால் துர்நாற்றம், போதை ஆசாமிகள் அட்டகாசம் என கோதைமங்கலம் ஊராட்சி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
பழநி ஊராட்சி ஒன்றியம் கோதைமங்கலம் ஊராட்சியில் குட்டைக்காடு, குறிஞ்சி நகர், கோதைமங்கலம், ஜவகர் நகர் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இங்கு பெரும்பாலான ரோடுகள் சேதமடைந்து உள்ளதால் வாகன ஓட்டிகள், விளை பொருட்களை கொண்டு செல்ல விவசாயிகள் சிரமப்படுகின்றனர்.
பழநி நகரில் பெரும்பாலான டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில் கோதைமங் கலம் ரோட்டில் உள்ள மதுக்கடைக்கு படையெடுக்கின்றனர். ரோட்டின் ஓரத்தை போதை ஆசாமிகள் திறந்தவெளி பாராக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதி பெண்கள் ரோட்டில் நடந்து செல்லவே அச்சப்படுகின்றனர். மதுக்கடை அடைக்கும் நேரத்தில் டூவீலரில் அதிவேகமாக செல்வதால் விபத்து அபாயம் ஏற்படுகிறது.
குளக்கரை, ரோட்டின் ஓரங்களில் குப்பை கொட்டப்படுகிறது. குப்பையால் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார கேட்டில் அப்ப குதி மக்கள் தவிக்கின்றனர். ரோட்டில் ஆங்காங்கே சுற்றித்திரியும் தெருநாய்களால் நடந்து செல்பவர்கள், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது.
கோயில் ரோட்டை சீரமைக்கணும் பிரகாஷ், காய்கறி கமிஷன் மண்டி ஊழியர், கோதை மங்கலம்: பிரசித்தி பெற்ற பெரியாவுடையார் கோயில் இவ்வூராட்சியில் உள்ளது. இக்கோயிலுக்கு பிரதோஷம், முக்கிய நாட்களில் தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். ஆனால் கோயிலுக்கு செல்லும் ரோடு சேதமடைந்து பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ளது. தற்போது மழை பெய்துள்ள நிலையில் வாகன ஓட்டிகள் ரோட்டில் வழுக்கி விழும் நிலை உள்ளது. விவசாயிகள் விளை பொருட்களை எடுத்துச் செல்ல சிரமப்படுகின்றனர்.
இவ்வூராட்சியில் திருவிழாக்கள், வீட்டு விசேஷங்களில் அதிக ஒலி எழுப்பும் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் முதியவர்கள், நோயாளிகள், மாணவர்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குப்பையை முறையாக அகற்ற நடவடிக்கை
சதீஷ்குமார், இறைச்சிகடை உரிமையாளர், கோதைமங்கலம்: இவ்வூராட்சி பகுதியில் குப்பையை கொட்ட தனி இடம் இல்லை. ரோட்டின் ஓரமும், குளக்கரையிலும் கொட்டப்படுகிறது. இதனை முறையாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். தெருவிளக்குகள் சரிவர எரிவதில்லை. ரோடுகள் சேதமடைந்து உள்ளன. தெருநாய்கள் தொல்லை அதிகம் உள்ளது. போதை ஆசாமிகள் ரோட்டில் அமர்ந்து மது குடிப்பதால் பெண்கள், பொதுமக்கள் அச்சத்துடன் செல்கின்றனர். இவற்றின் மீது அதிகாரிகள் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
