/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மழை நீர் தேக்கத்தால் சேதமான ரோடுகள்
/
மழை நீர் தேக்கத்தால் சேதமான ரோடுகள்
ADDED : டிச 07, 2025 05:28 AM

வடமதுரை: பி.கொசவபட்டி ஊராட்சியில் மழை நீர் தேக்கத்தால் சேதமான ரோடுகளால் மக்கள் சிரமப்படுகின்றனர்.
சிக்குபோலகவுண்டன்பட்டி, பாப்பிநாயக்கன்பட்டி, எட்டிகுளத்துப்பட்டி, பி.கொசவபட்டி, லக்கம்பட்டி, காமாட்சிபுரம், சுந்தரபுரி, திருக்கண், பாறைக்களம், ஆனந்தபுரம், மாநகரம், பெருமாள்கோவில்பட்டி உள்ளிட்ட கிராமங்களை உள்ளடக்கிய இந்த ஊராட்சி திருச்சி நான்குவழிச்சாலை, திண்டுக்கல் குஜிலியம்பாறை வழி கரூர் நெடுஞ்சாலை இடையே மையப்பகுதியில் உள்ளது.
வடமதுரையில் திருக்கண், மாரம்பாடி வழியே வேடசந்துாரை இணைக்கும் முக்கிய ரோடான பி.கொசவபட்டி ரோடு போக்குவரத்து குறைவான பகுதியாகவே நீடிக்கிறது. திருக்கண் வழியே வேடசந்துார் செல்லும் முக்கிய ரோட்டில் கொசவபட்டி பகுதியில் ஒவ்வொரு மழைக்கும் மழை நீர் தேங்கி மக்களை சிரமத்தில் ஆழ்த்துகிறது. அனைத்து ரோடுகளிலும் ஆங்காங்கே குப்பை தேங்கி கிடப்பது முகம்சுளிக்கும் வகையில் உள்ளது. பாடியூர் செல்லும் வழியில் எட்டிகுளத்துபட்டியில் கிராம தெருக்களின் கழிவு நீர் இன்றும் ரோட்டில் பாய்ந்து கடப்பது ஆச்சரியமான விஷயமாகவும்.துாய்மை இந்தியா திட்டம் இங்கெல்லாம் சென்றடையவில்லையே என சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
எட்டிகுளத்துபட்டி சி.பி.எம்.எல்., கட்சி பிரமுகர் ஆர்.ரவி கூறியதாவது: பி.கொசவபட்டியில் இருந்து எட்டிகுளத்துபட்டி ரோட்டில் இரு இடங்களில் புதிதாக பாலமும், மற்றொரு இடத்தில் சேதமுற்று மண் நிரப்பி அடைப்பட்டுள்ள பாலத்தை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கால்நடை மருத்துவ நிலையம் இல்லாததால் வெள்ளபொம்மன்பட்டி, பாடியூருக்கு செல்ல வேண்டியுள்ளது. எட்டிகுளத்துபட்டி வழியே பாடியூர் செல்லும் ரோட்டில் சில இடங்களில் கழிவு நீர் ரோட்டில் பாயும் நிலை இருப்பதால் டூவீலர்களில் செல்வோருக்கு சிக்கல் ஏற்படுகிறது. அரசு நடுநிலைப் பள்ளியை தரம் உயர்த்தி உயர்நிலைப் பள்ளியாக்க வேண்டும். குடியிருப்புகள் எண்ணிக்கை அதிகரித்துள்ள செம்மடை பகுதியில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்க வேண்டும் என்றார்.
- சிக்குபோலகவுண்டன்பட்டி இயற்கை விவசாயி டி.சிக்கணன் கூறியதாவது:
சிக்குபோல கவுண்டன்பட்டியில் இருக்கும் சேதமுற்ற குடிநீர் தொட்டியை அகற்றிவிட்டு புதிதாக தொட்டி கட்டி தர வேண்டும். திண்டுக்கல்லில் இருந்து திருக்கண் வழியே பி.கொசவபட்டிக்கு இயக்கப்படும் அரசு டவுன் பஸ் பள்ளி விடும் நேரத்தில் இயக்கப்படாததால் 2 கி.மீ., நடக்கும் நிலை உள்ளது. வடமதுரை திருக்கண் ரோட்டில் கொசவபட்டி பகுதியில் ரோட்டில் நீர் தேங்கி நிற்பதை தடுக்க முறையான வடிகால் கட்டமைப்பு அவசியம். ரோட்டோரங்களில் அதிகளவில் மரக்கன்றுகள் நட்டு பாதுகாப்புடன் ஊராட்சி நிர்வாகம் வளர்க்க வேண்டும் என்றார்.

