வண்டிப்பாதையான ரோடுகள்; சிதைந்த வடிகால் கட்டமைப்புகள் பிலாத்து ஊராட்சியில் மக்கள் பரிதவிப்பு
வண்டிப்பாதையான ரோடுகள்; சிதைந்த வடிகால் கட்டமைப்புகள் பிலாத்து ஊராட்சியில் மக்கள் பரிதவிப்பு
ADDED : ஜூலை 08, 2026 03:12 AM

வடமதுரை: பிலாத்து ஊராட்சியில் வண்டிப்பாதையாகவே நீடிக்கும் கிராம இணைப்பு ரோடுகள்; ரோட்டோரங்களில் தேங்கிக்கிடக்கும் குப்பை; போக்குவரத்து வசதி குறைவு என பல பிரச்னைகளால் மக்கள் சிரமப்படுகின்றனர்.
இவ்வூராட்சியில் கம்பிளியம்பட்டி, ஆண்டிபட்டி, பாரதிநகர், தலைவெட்டிகுளம், ஆண்டிகுளம், கல்குளம், வாலிசெட்டிபட்டி, கிருஷ்ணன்களம், பெத்தப்பட்டி உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. திருச்சி - திருச்சி நான்குவழிச்சாலை, அய்யலுார் - எரியோடு, வடமதுரை - வேடசந்துார் நெடுஞ்சாலைகளுக்கு இடையே மையப்பகுதியில் இவ்வூராட்சி உள்ளது.
இங்குள்ள ஆண்டிகுளம் மக்கள் பஸ் வசதிக்கு அருகாமையில் இருக்கும் பாகாநத்தம் ஊராட்சி ஒத்தபட்டிக்கு செல்ல வேண்டும். ஆனால் வழித்தடம் தனியார் இடங்கள் வழியே செல்லும் கற்கள் பெயர்ந்த வண்டிப்பாதையாகவே உள்ளது.
அதேபோல் கல்குளம் மக்கள் தென்னம்பட்டி ஊராட்சி ஆண்டிபட்டி பிரிவுக்கு செல்ல வேண்டும். இதுவும் தனியார் இடங்களின் வழியே அமைந்த வண்டிப்பாதையாகவே உள்ளதால் மக்கள் சிரமப்படுகின்றனர்.
பிலாத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் ரோட்டில் வரட்டாறு குறுக்கிடும் பகுதி இன்னமும் தரைப்பாலமாகவே உள்ளது. ஒவ்வொரு மழைக்கும் இங்கு நீர் வெளியேறாமல் ரோட்டில் தேங்கி மக்களை அவதிப்பட வைக்கிறது.
பிலாத்து - தென்னம்பட்டி ரோடு வளைவில் ஊராட்சி சார்பில் குழாய் பதித்து கழிவுநீரை கடத்தும் பகுதியில் அடிக்கடி அடைப்பு ஏற்படுகிறது.
மெத்தபட்டி, கம்பிளியம்பட்டி, வாலிசெட்டிபட்டி, பிலாத்து பகுதியினர் அதிகளவில் வடமதுரை செல்வதற்கு ரெட்டியபட்டி வழித்தடத்தையே பயன்படுத்துகின்றனர்.
இதுதவிர இப்பகுதியில் களத்து வீடுகளில் வசிக்கும் விவசாயிகள், விளை நிலங்கள் வைத்திருப்போர் என பலருக்கு இந்த ரோடு மட்டுமே வெளியே செல்ல இருக்கும் ஒரு வாய்ப்பு.
ஆனால் இந்த ரோட்டில் வடமதுரை பேரூராட்சி பகுதியில் புதுப்பித்தல் பணி நடந்தாலும், பிலாத்து ஊராட்சி பகுதியில் ரோடு பழுதடைந்த நிலையில் பல ஆண்டுகளாக போக்குவரத்திற்கு தகுதியற்றதாக உள்ளது.இத்தடத்தில் வரட்டாறு குறுக்கிடும் பகுதி வளைவாகவும், ஆழமாகவும் இருப்பதால் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது. இங்கு உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும்.
குறுகலான ரோடுகளால் விபத்து அபாயம் சரவணன், வர்த்தக பிரமுகர், பிலாத்து : பெத்தபட்டி மக்கள் எளிதாக கம்பிளியம்பட்டி, பிலாத்து வந்து செல்ல கப்பி ரோட்டை தார் ரோடாக மேம்படுத்த வேண்டும். பிலாத்து வழியே செல்லும் ரோட்டில் போதிய அகலம் இல்லாததால் வாகனங்கள் அருகிலுள்ள சிதைந்த வடிகால் கட்டமைப்பிற்குள் இறங்கி விடுகின்றன.
தென்னம்பட்டி ரோடு வளைவு குறுகியதாக இருப்பதால் வாகனங்கள் நேர் எதிரே வந்தால் விபத்து ஆபத்து ஏற்படுகிறது. இவ்விரு பகுதிகளிலும் ரோட்டை அகலப்படுத்த நெடுஞ்சாலைத்துறை முன்வர வேண்டும்.
சுற்றுச்சுவர் இல்லாத ஆரம்ப சுகாதார நிலையம் ரமேஷ், சமூக ஆர்வலர், பிலாத்து: வரட்டாறு அருகில் அமைந்துள்ள பிலாத்து அரசு ஆரம்ப சுகாதார நிலைய நுழைவாயில் பகுதியில் மட்டுமே சுவர் கட்டப்பட்டுள்ளது. பக்கவாட்டிலும் பின்பகுதியிலும் சுற்றுச்சுவர் இல்லை.
ஓடைக்குள் புதர் அதிகம் இருப்பதால் பாம்பு உள்ளிட்ட விஷஜந்துக்கள் அடிக்கடி சுகாதார நிலைய வளாகத்திற்குள் வரு கின்றன. இதனால் இங்கு தங்கும் நோயாளிகள், உதவியாளர்கள், மருத்துவ பணியாளர்கள் ஒருவித அச்சத்துடன் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர்.
இங்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும். பிலாத்து வழியே கூடுதல் பஸ் சேவைகளை இயக்க அரசு முன்வர வேண்டும்.
அங்கன்வாடி குழந்தைகள் அலைக்கழிப்பு கண்ணன், சமூக ஆர்வலர், பாரதிநகர்: பிலாத்து பாரதி நகர் குழந்தைகள் பக்கத்து ஊராட்சி பகுதியான நாகன் களத்துார் அங்கன்வாடிக்கு செல்கின்றனர். இப்பகுதியில் போதிய இடவசதி இருக்கும் நிலையில் அங்கன்வாடி மையம், சமுதாய கூடம் கட்டித்தர வேண்டும்.
இங்குள்ள பயணியர் நிழற்கூடம் பழுதடைந்து பயனற்று கிடக்கிறது. முதல் தெருவில் அமைக்கப்பட்ட சிமென்ட் ரோடு சிதைந்து போய் உள்ளது. குடிநீர் மேல்நிலைத் தொட்டிக்கு செல்லும் குழாய் உடைந்து நீர் கசிந்து ரோட்டில் தேங்குகிறது.
