புறம்போக்கு இடத்தில் கட்டப்பட்ட வீடுகள், தென்னை மரங்கள் அகற்றம்
புறம்போக்கு இடத்தில் கட்டப்பட்ட வீடுகள், தென்னை மரங்கள் அகற்றம்
ADDED : ஜூலை 02, 2026 04:24 AM

பவானி:புறம்போக்கு இடத்தில் கட்டப்பட்டிருந்த வீடுகள், மரங்கள் போலீஸ் பாதுகாப்புடன்
அகற்றப்பட்டன.
அத்தாணி
அருகே குப்பாண்டம்பாளையம் பஞ்.,க்கு உட்பட்ட கரட்டூர்மேட்டில்,
குழிதோட்டம் பகுதியில், வருவாய் தறையினருக்கு சொந்தமான
கல்லாங்குத்து புறம்போக்கு நிலம், 1 ஏக்கர் உள்ளது. இதை அப்பகுதி
விவசாயிகள் ஆக்கிரமிப்பு செய்து தென்னை, பாக்கு மரங்கள் மற்றும்
வீடுகள் கட்டி, 50 ஆண்டுகளுக்கு மேலாக வசிக்கின்றனர்.
இதனை அகற்ற
வேண்டும் என சிலர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு
தொடர்ந்திருந்தனர். இந்நிலையில் வருவாய் துறையினர், ஆப்பக்கூடல்
போலீசார் நேற்று காலை ஆக்கிரமிப்புகளை அகற்ற, பொக்லைன்
இயந்திரங்களுடன் சம்பவ இடத்திற்கு வந்தனர். அப்பகுதி மக்கள்
எதிர்ப்பு தெரிவித்து, கால அவகாசம் வேண்டும் என்றனர். மேலும்
குழந்தைகளுடன் பெண்கள், பொக்லைன் இயந்திரம் முன் உட்கார்ந்து
மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அந்தியூர் தாசில்தார் இளஞ்செழியன்
மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் அவர்களிடம், உயர்நீதிமன்ற
உத்தரவின்படி ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக கூறினர்.
இதற்கிடையில்,
போராட்டக்காரர்களை கைது செய்ய ஆயுதப்படை பிரிவு போலீஸ் டி.எஸ்.பி.,
ஜெய்சிங் தலைமையில், 50க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிந்ததால்
பரபரப்பு நிலவியது. இருந்தும் உயர்நீதிமன்ற உத்தரவை மீற முடியாத
நிலையில், வீடுகள், தென்னை, பாக்கு மரங்கள் ஆகியவற்றை பொக்லைன்
இயந்திரங்களுடன் இடித்து தள்ளி, மரங்களை வேருடன் அகற்றினர்.
