சுங்க கட்டண வசூல் விவகாரம் நேதாஜி மார்க்கெட்டில் நள்ளிரவில் 'லடாய்'
சுங்க கட்டண வசூல் விவகாரம் நேதாஜி மார்க்கெட்டில் நள்ளிரவில் 'லடாய்'
ADDED : ஜூலை 08, 2026 05:06 AM

ஈரோடு:ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட்டில், சுங்க கட்டணம் தனியார் ஒப்பந்ததாரர் மூலம் வசூலிக்கப்படுகிறது.
விதிமீறி அதிகமாக வசூலிப்பதாக ஒரு தரப்பு வியாபாரிகள் குற்றம்
சாட்டி வருகின்றனர். குறிப்பாக காய்கறி ஏற்றி வரும் சரக்கு
வாகனங்களிடம், மூட்டைக்கு, 10 ரூபாய் வசூலிப்பதாகவும்,
மார்க்கெட்டு வெளியே வாடகை கடையில் உள்ளவர்களிடமும் சுங்கம் வசூல்
செய்வதாகவும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இது தொடர்பாக கடந்த
மாதம், 9ம் தேதி மாநகராட்சி அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடந்தது.
அரசு விதிகளின்படி மூட்டை அடிப்படையில் கட்டணம் வசூலிக்கலாம்
என்றும், அனைத்து கடைக்காரர்களும் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும்
ஆணையர் அர்பித்ஜெயின் தெரிவித்தார். இதையடுத்து புகார்தாரர்
தரப்பினர், சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுடன் ஆலோசித்து
முடிவை தெரிவிப்பதாக கூறி புறப்பட்டு சென்றனர். இந்நிலையில் நேற்று
நள்ளிரவு சுங்க கட்டணம் தொடர்பாக, ஒப்பந்ததாரர் மற்றும்
வியாபாரிகளிடையே பிரச்னை ஏற்பட்டு கடும் வாக்குவாதமாக மாறியது.
வீரப்பன்சத்திரம் போலீசார் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி
அனுப்பினர்.
ஆணையர் ஆலோசனை
ஒப்பந்தாரர், வியாபாரிகள் இடையே
பிரச்னை தீராத நிலையில், மாநகராட்சி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம்
நேற்று நடந்தது. ஆணையர் அர்பித் ஜெயின் தலைமையில் டவுன் டி.எஸ்.பி.,
முத்துகுமார், ஒப்பந்ததாரர் அருண் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.மார்க்கெட்டில்
சுங்க கட்டணம் வசூல் தொடர்பாக விதிகளை பின்பற்ற வேண்டும். அனைத்து
வியாபாரிகளுக்கும் அழைப்பு விடுத்து ஆர்.டி.ஓ., தலைமையில்
பேச்சுவார்த்தை நடத்தி, விரைவில் தீர்வு காண வேண்டும் என்று ஆணையர்
அறிவுறுத்தினார்.
