சின்னசேலம் சாலையோரம் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி தீவிரம்
சின்னசேலம் சாலையோரம் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி தீவிரம்
ADDED : ஜூலை 03, 2026 05:40 PM

சின்னசேலம்: சின்னசேலத்தில் நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணிகள் மேற்கொள்ளப்படும் நிலையில், சாலையோரம் வடிகால் வாய்க்கால் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
சின்னசேலம் பஸ் நிலையத்தில் இருந்து பல்வேறு கிராமங்கள் மற்றும் ஆத்துார், சேலம், விழுப்புரம், கடலுார், சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களுக்கு பஸ்கள் செல்கிறது. தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சின்னசேலத்தை கடந்து செல்லும் நிலையில், இருவழிச் சாலையால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் கடைகள், தனி நபர்கள் ஆக்கிரமிப்பு நாளுக்கு நாள் அதிகரித்தது.
இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வந்தனர். குறுகலான சாலையால் அடிக்கடி நிகழும் விபத்துகளால் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில், சின்னசேலம் மின்வாரிய அலுவலகம் முதல் அம்மையகரம் வரை 4.7 கி.மீ., துார இரு வழிச்சாலையை சென்டர் மீடியனுடன் கூடிய நான்கு வழிச்சாலையாக மாற்றுவதற்கு திட்டமிடப்பட்டது. இதற்காக முதல்வரின் சாலை மேம்பட்டு திட்டத்தின் கீழ் ரூ.30 கோடியே 90 லட்சம் நிதி ஒதிக்கீடு செய்யப்பட்டது. தொடர்ந்து அளவீடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு ஆக்கிரமிப்புகள் அகற்றி சாலையோரத்தில் இருந்த மின் கம்பங்கள், மின்மாற்றிகள் இடமாற்றம் செய்யப்பட்டது.
நான்கு வழிச்சாலையின் நடுவே 1.20 மீ மைய தடுப்பு சுவருடன், இரு பக்கங்களிலும் 7.50 மீ அகலத்திற்கு சாலைகள் அமைகிறது. சாலையில் 12 கல்வர்ட் பாலம், ஒரு சிறுபாலம் அகலப்படுத்தி அமைக்கப்படுகிறது. மழை காலங்களில் சாலையில் மழை நீர் தேங்காத வண்ணம் சாலையோரம் வடிகால் வாய்க்கால் பணி நடந்து வருகிறது. நெடுஞ்சாலை துறை கோட்ட அலுவலர் ராதாகிருஷ்ணன், வாய்க்கால் மற்றும் பாலம் கட்டுமான பணிகளை பார்வையிட்டார்.
