/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சி தி.மு.க.,வில் உருவானது 'புதிய புயல்'
/
கள்ளக்குறிச்சி தி.மு.க.,வில் உருவானது 'புதிய புயல்'
கள்ளக்குறிச்சி தி.மு.க.,வில் உருவானது 'புதிய புயல்'
கள்ளக்குறிச்சி தி.மு.க.,வில் உருவானது 'புதிய புயல்'
ADDED : டிச 02, 2025 05:45 AM

க ள்ளக்குறிச்சி தி.மு.க.,வில் கோஷ்டி அரசியல் தலைதுாக்க துவங்கியிருப்பது மாவட்ட தி.மு.க.,வில் பெரும் புயலை கிளப்பியுள்ளது.
தி.மு.க.,வை பொறுத்தவரை மாவட்டத்திற்கு ஒரு குறுநில மன்னர்கள் கோலோச்சி இருப்பது வழக்கமான ஒன்று. இதுதான் அக்கட்சியின் வளர்ச்சிக்கும், வீழ்ச்சிக்கும் காரணமாக கூறப்படுகிறது. ஆனால் சமீப காலமாக இப்போக்கை மாற்ற கட்சி தலைமை பல அதிரடி முடிவுகளை மேற்கொண்டு வருகிறது; அதில் வெற்றியும் பெற்றுள்ளது.
இந்த சூழலில் கள்ளக்குறிச்சி மாவட்ட தி.மு.க.,வில் சீனியரான உதயசூரியன் உள்ளிட்டவர்களை ஓரம் கட்டி சமீபகாலமாக அசைக்க முடியாத ஜாம்பவானாக இருந்து வரும் வசந்தம் கார்த்திகேயன், முன்னாள் எம்.பி., கவுதம சிகாமணியை தொகுதிக்குள் நுழையாத வகையில் ஓரம் கட்டி வைத்திருந்தார்.
அதே பாணியில் அவரது தீவிர ஆதரவாளரான மலையரசனுக்கு எம்.பி., சீட்டு வாங்கி கொடுத்து, தேர்தல் களத்தில் தானே போட்டியிடுவதாக மாயை உருவாக்கி, வெற்றியும் பெற வைத்தார்.
தனது தொண்டனாக, தோழனாக இருந்த ஒருவரை எம்.பி., யாக பார்க்க மனம் இல்லாததால் ஓரம் கட்டி வைத்தார். இது கட்சி தலைமைக்கும் நன்கு தெரியும்.
தலைமை கண்டுகொள்ளாததால் தனிமைப்படுத்தப்பட்ட மலையரசன் மாவட்ட பொறுப்பு அமைச்சரான வேலுவிடம் ஒட்டிக்கொள்ள முயற்சி செய்து கொண்டிருந்தார்.மாவட்ட தி.மு.க., வில் பேனர் உள்ளிட்ட கட்சி நிகழ்ச்சிகளில் மலையரசனின் போட்டோ மிஸ்ஸிங்காகவே இருக்கும். என்றாலும் மேடையில் ஒரு சேர் கிடைக்காதா என ஓரமாக ஒதுங்கி உட்காரும் நிலையில் அவரும் அசராமல் நிகழ்ச்சியில் பங்கேற்பார்.
மாவட்டத்தில் எம்.எல்.ஏ., க்கள் உதயசூரியன், மணிகண்ணன் உள்ளிட்டவர்களே ஓரம் கட்டப்பட்டு ஒதுங்கி நிற்கும் நிலையில், எதிர்த்து அரசியல் செய்வது சாத்தியமற்றது என்ற சூழலில் தான் இதுவரை இருந்து வந்தார்.ஆனால், திடீரென தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளார். இதுதான் கள்ளக்குறிச்சி தி.மு.க., அரசியலில் 'டிட்வா' புயலைக் காட்டிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் தியாகதுருகத்தில் உதயநிதி பிறந்தநாள் விழா பேனர் வைக்கப்பட்டது. அதில் மாவட்ட அமைச்சர் வேலு, அவரது மகன் கம்பன், மாநில பொதுக்குழு உறுப்பினர் மணிமாறன் படங்கள் இடம்பெற்றிருந்தது.
மாவட்ட செயலாளர் வசந்தம் கார்த்திகேயன் படம் மிஸ்ஸிங். இதுதான் இன்றைய நிலையில் கள்ளக்குறிச்சி தி.மு.க., வட்டாரத்தில் பற்றி எரியும் டாபிக்காக உள்ளது.
மலையரசனுக்கு, வசந்தம் கார்த்திகேயன் படத்தை தவிர்த்து பேனர் வைக்கும் அளவிற்கு தைரியம் கொடுத்தது யார்? அதன் பின்னணியில் இருக்கும் அரசியல் என்ன என்ற விவாதம்தான் மாவட்டம் முழுதும் பேசு பொருளாகியுள்ளது.

