/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
திருக்கோவிலுார் - ஆசனுார் 4 வழிச் சாலை பணியின் தரம் கேள்விக்குறி
/
திருக்கோவிலுார் - ஆசனுார் 4 வழிச் சாலை பணியின் தரம் கேள்விக்குறி
திருக்கோவிலுார் - ஆசனுார் 4 வழிச் சாலை பணியின் தரம் கேள்விக்குறி
திருக்கோவிலுார் - ஆசனுார் 4 வழிச் சாலை பணியின் தரம் கேள்விக்குறி
ADDED : டிச 02, 2025 05:44 AM

தி ருக்கோவிலுார் - ஆசனுார் இடையே நான்கு வழிச்சாலையாக 101 கோடி ரூபாய் மதிப்பில் தரம் உயர்த்தும் முதல் கட்ட பணி தரமற்ற வகையில் இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், ஆசனுாரில் முதல் திருக்கோவிலுாரை இணைக்கும் வகையில் நான்கு வழிச்சாலை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக திருக்கோவிலுார், கீழத்தாழனுாரில் இருந்து கெடிலம் வரையிலும்; எறையூரில் இருந்து கோட்டை வரை என 16 கி.மீ., துாரம் வரை, 101 கோடி ரூபாய் மதிப்பில் முதல் கட்ட பணி கடந்த ஜனவரி மாதம் துவங்கியது.
ஏற்கனவே உள்ள 8 மீட்டர் அகல சாலையை ஒரு பக்கம் 4.6 மீட்டரும், மற்றொரு பக்கம் 3.4 மீட்டர் விரிவுபடுத்தி சென்டர் மீடியன் அமைத்து மேம்படுத்தும் பணிகளுக்காக 2 பக்கமும் பள்ளம் எடுக்கப்பட்டு, ஜல்லி மற்றும் வெட்மிக்ஸ் கொட்டப்பட்டுள்ளது.
இதில் பயன்படுத்தும் வெட்மிக்சின் தரமற்று இருப்பதாக விபரம் அறிந்த வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். வெட்மிக்ஸ் மீது முறையாக தண்ணீர் ஊற்றி அழுத்தம் கொடுக்கப்படவில்லை.
வழக்கமாக விரிவுபடுத்தப்பட்ட பகுதியில் கொட்டிய வெட்மிக்சுக்கு தண்ணீர் தெளித்து ரோலர் மூலம் முறையாக அழுத்தம் கொடுக்க வேண்டும். அதன் மீது, பிரேம் கோட் எனும் தார் சாலையை பிடிப்புடன் வைக்கும் கெமிக்கல் தெளித்து, 24 மணி நேரத்துக்கு பிறகு டேக்கோட் ஆயில் அடித்து, விரிவுப்படுத்தப்பட்ட பகுதியின் மீது மட்டும் டி.பி.எம்., தார் சாலை அமைக்க வேண்டும்.
பின், பழைய சாலையையும் புதிதாக விரிவுபடுத்தப்பட்ட சாலையையும் இணைத்து, 5 செ.மீ., அளவிற்கு டி.பி.எம்., தார் சாலை போடுவது தான் வழக்கம்.
இறுதியாக சிப்ஸ் கலந்த தார் கலவையுடன் வழுவழுப்பான ஓடுதளம் அமைக்கப்படும். இவ்வாறுதான் சாலை அமைக்க வேண்டும் என ஒப்பந்தமும் செய்யப்பட்டுள்ளது.
சாலையை அதிகாரிகள் ஆய்வு செய்யும் குறிப்பிட்ட இடங்களில் மட்டும் இதுபோன்ற நடைமுறையை பின்பற்றுகின்றனர். மற்ற அனைத்து இடங்களிலும், விரிவுபடுத்தப்பட்ட வெட்மிக்ஸ் போடப்பட்ட பகுதியில் பிரைம் கோட் போடாமல், பழைய தார் சாலையுடன் இணைத்து டேகோட் ஆயில் அடித்து ஒரே நேரத்தில் டி.பி.எம்., தார் சாலை அமைக்கப்படுகிறது.
சாலை பணியை நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் யாரும் மேற்பார்வை செய்வதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. குறிப்பாக தினக்கூலி மற்றும் ஒன்றிரண்டு சாலை பணியாளர்கள் மட்டுமே சாலை அமைக்கும் பணியை மேற்பார்வை செய்கின்றனர்.
இதன் காரணமாக குறிப்பிட்ட ஒரு சில பகுதிகளில் வெட்மிக்ஸ் மீது போடப்பட்ட டி.பி.எம்., தார்சாலையும் ஆங்காங்கே பெயர்ந்து பேட்ச் போடப்பட்டுள்ளது. ரோடு போட்டுக் கொண்டு செல்லும்போதே இந்த நிலைமை என்றால், பணி முடிந்து வெயில், மழைக் காலங்களில் சாலையின் நிலை எப்படி இருக்கும் என்பது தான் கேள்வியாக உள்ளது.
மேலும், ஆசனுாரில் இருந்து திருக்கோவிலுார் வரை சாலை வரிவாக்கப்பணி நடைபெறம் பகுதிகளில் எச்சரிக்கை பலகையோ ரிப்ளக்டரோ இல்லாததால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைகின்றனர்.
தமிழக வளர்ச்சிக்கு அடித்தளமாக இருக்கும் சாலை மேம்பாட்டு பணிகளை தரமாகவும், விரைவாகவும் செய்து முடிக்க வேண்டும் என்பதுதான் அரசின் நோக்கமாக உள்ளது.
ஆனால் அதற்கு நேர்மாறாக இப்பணி அமைந்திருப்பதால் மாநில தர கட்டுப்பாட்டு அதிகாரிகள் சாலையை முழுமையாக ஆய்வு செய்து, பணியை தரமாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே திருக்கோவிலுார் - எலவனசூர்கோட்டை சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

