சாலையோரம் இளநீர் மட்டை குவிப்பு தேனம்பாக்கத்தில் டெங்கு அபாயம்
சாலையோரம் இளநீர் மட்டை குவிப்பு தேனம்பாக்கத்தில் டெங்கு அபாயம்
ADDED : ஜூலை 06, 2026 04:50 PM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் தேனம்பாக்கம் ஏரிக்கரை சாலையோரம், மலைபோல குவிக்கப்பட்டுள்ள இளநீர் மட்டையால், அப்பகுதியில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது.
தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில், ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி, சுகாதாரம், நெடுஞ்சாலை, நீர்வளம், தீயணைப்பு, மின்வாரியம் என, அனைத்து துறையினரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.
அதேபோல, பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் வைரஸ், டெங்கு உள்ளிட்ட காய்ச்சலை கட்டுப்படுத்த, மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கையை எடுத்து வருகிறது.
இந்நிலையில், தேனம்பாக்கம் ஏரிக்கரை சாலையோரம் இளநீரை வெட்டி விற்கும் வியாபாரிகள், இளநீர் மட்டையை, அதே பகுதியில் சாலையோரம் மலைபோல குவித்துள்ளனர்.
தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், இளநீர் மட்டையில் தேங்கும் மழைநீரில் ‛ஏடிஸ்’ கொசுக்கள் உற்பத்தியாகி, தேனம்பாக்கத்தில் டெங்கு காய்ச்சல் பரவும் சூழல் உள்ளது.
எனவே, தேனம்பாக்கம் பிரதான சாலையோரம் மலைபோல குவிக்கப்பட்டுள்ள இளநீர் மட்டையை அகற்ற காஞ்சிபுரம் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
