மழைநீர் கால்வாயில் வளர்ந்துள்ள செடிகளை அகற்ற கோரிக்கை
மழைநீர் கால்வாயில் வளர்ந்துள்ள செடிகளை அகற்ற கோரிக்கை
ADDED : ஜூலை 03, 2026 05:10 PM

காஞ்சிபுரம்: நாயகன்பேட்டையில் செடிகள் வளர்ந்து துார்ந்த நிலையில் உள்ள, மழைநீர் வடிகால்வாயை துார்வாரி சீரமைக்க வேண்டும் என, பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாலாஜாபாத் ஒன்றியம், ஏகனாம்பேட்டை, நாயகன்பேட்டை சுற்றியுள்ள பகுதியில் பெய்யும் மழைநீர், தாங்கி கிராமத்திற்கு செல்லும் மழைநீர் வடிகால்வாய் உள்ளது. முறையான பராமரிப்பு இல்லாதால், ஏகனாம்பேட்டைக்கும், நாயகன்பேட்டைக்கும் இடையே உள்ள சிறுபாலம் அருகில் கால்வாயில் செடிகள் வளர்ந்து அடையாளமே தெரியாமல் உள்ளது.
இதனால், மழை பெய்தால் கால்வாய் மூலம் செல்ல வேண்டிய மழைநீர் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளை சூழும் நிலை உள்ளது. எனவே, தென்மேற்கு பருவமழை தீவிரமடைவதற்குள் நாயகன்பேட்டையில் துார்ந்த நிலையில் உள்ள மழைநீர் வடிகால்வாயை முழுமையாக துார்வாரி சீரமைக்க வேண்டும் என, பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
