களக்காட்டூரில் காகங்கள் மர்மமான முறையில் உயிரிழப்பு
களக்காட்டூரில் காகங்கள் மர்மமான முறையில் உயிரிழப்பு
ADDED : ஜூலை 07, 2026 10:45 PM

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தை அடுத்த களக்காட்டூரில், மூன்று நாட்களாக காகங்கள் மர்மமான முறையில் அடுத்தடுத்து உயிரிழந்து வருவது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
களக்காட்டூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மூன்று தினங்களாக ஆங்காங்கே காகங்கள் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்து வருகின்றன.
கிராமத்தின் முக்கிய தெருக்கள், மரத்தடிகள் மற்றும் விவசாய நிலங்களில் தினமும் காகங்கள் இறந்து கிடப்பதாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர். இப்படி தொடர்ந்து காகங்கள் மர்மமான முறையில் இறப்பது இப்பகுதியில் இதுவே முதல்முறை.
இதற்கு ஏதேனும் தொற்று நோய் காரணமா, பறவைகளுக்கு ஏதேனும் புதிய வகை நோய் தாக்கி உள்ளதா என தெரியவில்லை. இதனால் மற்ற கால்நடைகளுக்கும், மனிதர்களுக்கும் பாதிப்பு ஏற்படுமோ என அச்சம் எழுந்துள்ளது.
இதுகுறித்து கால்நடை பராமரிப்பு துறையினர், உடனடியாக களக்காட்டூர் கிராமத்திற்கு நேரில் வந்து ஆய்வு செய்ய வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
