/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் தேர்தல் கண்காணிப்பு பணி... மும்முரம்! வாகன சோதனையில் பறக்கும் படை, வீடியோ குழுக்கள்
/
காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் தேர்தல் கண்காணிப்பு பணி... மும்முரம்! வாகன சோதனையில் பறக்கும் படை, வீடியோ குழுக்கள்
காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் தேர்தல் கண்காணிப்பு பணி... மும்முரம்! வாகன சோதனையில் பறக்கும் படை, வீடியோ குழுக்கள்
காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் தேர்தல் கண்காணிப்பு பணி... மும்முரம்! வாகன சோதனையில் பறக்கும் படை, வீடியோ குழுக்கள்
ADDED : மார் 18, 2024 03:21 AM

காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதுார் லோக்சபா தொகுதியில் தேர்தல் அலுவலர்கள், கண்காணிப்பு பணியில் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளனர். வாகன சோதனையில் பறக்கும் படை, வீடியோ குழுக்கள் ஈடுபட்டு உள்ளனர். அதேசமயம் உள்ளாட்சி நிர்வாகிகள், அரசியல் கட்சி தலைவர்களின் படங்கள், கல்வெட்டுகளை மறைக்காமல் அலட்சியம் செய்து வருகின்றனர்.
நாட்டின் 18வது லோக்சபா தேர்தலுக்கான நடத்தை விதிமுறைகள், நேற்று முன்தினம் முதல் அமலுக்கு வந்துள்ளன. ஏப்., 19ம் தேதி நடக்கும் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும், காஞ்சிபுரம் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டுள்ளனர்.
84 குழுவினர்
தொடர்ந்து, பறக்கும் படையினர், நிலையான கண்காணிப்பு குழுவினர்,வீடியோ குழுவினர் என, 84 குழுவினர் களத்தில் இறங்கி, வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
காஞ்சிபுரம் லோக்சபா தொகுதியில், காஞ்சிபுரம், உத்திரமேரூர், திருப்போரூர், செய்யூர், செங்கல்பட்டு, மதுராந்தகம் என, ஆறு சட்டசபை தொதிகள் உள்ளன.
இதில் ஆண் வாக்காளர்கள் 8.86 லட்சமும், பெண் வாக்காளர்கள் 8.46 லட்சமும், மூன்றாம் பாலினத்தவர், 294 பேரும் என, மொத்தம் 17.3 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.
மாவட்டத்தில், 1,417 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 178 ஓட்டுச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன.
தேர்தல் பணியில், 6,708 அரசு ஊழியர்கள் ஈடுபட உள்ளதாக, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டில் அதிகம்
தொகுதிக்குள் அதிக வாக்காளர்கள் உள்ள பகுதிகளில் பிரசாரம் செய்வது பற்றிய பல்வேறு ஆலோசனைகளை அரசியல் கட்சியினர் மேற்கொண்டு வருகின்றனர்.
அவ்வாறு, காஞ்சிபுரம்தொகுதிக்குள், செங்கல்பட்டு சட்டசபை தொகுதியில்தான் அதிக வாக்காளர்கள் உள்ளது தெரியவந்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், மூன்று ஷிப்டுகளில், 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில், பறக்கும் படையும், கண்காணிப்பு குழுவும் பணியாற்ற துவங்கியுள்ளனர்.
ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும், மூன்று வெவ்வேறு இடங்களில், மூன்று ஷிப்டுகளில் பணியாற்றுகின்றனர். இதனால், கண்காணிப்பு பணிகள் தீவிரமாக இருக்கும் என, தேர்தல் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலை, குன்றத்துார் இணைப்பு சாலை, உத்திரமேரூர் - செங்கல்பட்டு சாலை, செவிலிமேடு என, முக்கிய சந்திப்புகளில் வாகன சோதனை நடைபெறுகிறது.
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்து 24 மணி நேரத்திற்கு மேலாகியும், காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில், தேர்தல் நடத்தை விதிகள் முறையாக பின்பற்றப்படவில்லை.
அரசியல் கட்சி தலைவர்களின் படங்கள் மறைக்கப்பட வேண்டும். ஆனால், பல இடங்களில் மறைக்கப்படாமலேயே உள்ளன.
காஞ்சிபுரம் ஆஸ்பிட்டல் சாலையில் உள்ள சட்டசபை அலுவலகத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்திருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யவில்லை.
ஆனந்தாபேட்டையில், தி.மு.க., - அ.தி.மு.க., கட்சி கொடி கம்பம், தோரணம் அகற்றப்படாமல் உள்ளது.
இதேபோல், காஞ்சி உழவர் சந்தை நுழைவாயில் வளைவு, காஞ்சிபுரம் சேக்குபேட்டையில் உள்ள அறிவுசார் மையத்தின் நுழைவாயில், காமராஜர் வீதி, தாலுகா அலுவலகம்பேருந்து நிறுத்தத்திலும் முன்னாள் முதல்வர் கருணாநிதி, முதல்வர் ஸ்டாலின் படம் மறைக்கப்படாமல் உள்ளது.
குற்றச்சாட்டு
இதனால், காஞ்சிபுரத்தில் தேர்தல் நடத்தை விதிகளை உள்ளாட்சி நிர்வாகத்தினர் கண்டுகொள்ளவில்லை என குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.
ஸ்ரீபெரும்புதுார் லோக்சபா தொகுதியில், ஸ்ரீபெரும்புதுார், பல்லாவரம், தாம்பரம், மதுரவாயல், அம்பத்துார், ஆலந்துார் ஆகிய ஆறு சட்டசபை தொகுதிகள் உள்ளன.
2,437 ஓட்டுச்சாவடிகள்
இந்த தொகுதியில், ஆண் வாக்காளர்கள் 11,75,997 பேரும், பெண் வாக்காளர்கள் 11,97,060 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 429 பேரும் என, மொத்தம் 23,73,486 வாக்காளர்கள் உள்ளனர்.
மாற்றுத்திறனாளிகள் 7,810 பேரும், 85 வயது நிரம்பியவர்கள் 24,654 பேரும் உள்ளனர். 7,810 மாற்றுத்திறனாளிகளும், 455 ராணுவ வீரர்களும் உள்ளனர்.
தொகுதியில், 2,420 ஓட்டிச்சாவடிகளும், 17 துணை ஓட்டுச்சாடிகளும் என, மொத்தம் 2,437 ஓட்டுச்சாவடிகள் உள்ளன.
சென்னை குரோம்பேட்டை எம்.ஐ.டி., ஓட்டு எண்ணும் மையமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில், பறக்கும் படைகள், நிலையான கண்காணிப்பு குழுக்கள் என, தலா 21 குழுக்களும், 14 வீடியோ கண்காணிப்பு குழுக்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இதில், நேற்று முன்தினம் முதல், சுங்கச்சாவடிகள், முக்கிய சாலை சந்திப்புகளில், வாகனங்களை தணிக்கை செய்து, சோதனை செய்யும் பணியில் பறக்கும் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
-- நமது நிருபர் குழு- -

