/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மக்காச்சோளம் விதை உற்பத்தி ஏக்கருக்கு ரூ.1 லட்சம் லாபம்
/
மக்காச்சோளம் விதை உற்பத்தி ஏக்கருக்கு ரூ.1 லட்சம் லாபம்
மக்காச்சோளம் விதை உற்பத்தி ஏக்கருக்கு ரூ.1 லட்சம் லாபம்
மக்காச்சோளம் விதை உற்பத்தி ஏக்கருக்கு ரூ.1 லட்சம் லாபம்
ADDED : பிப் 12, 2025 01:52 AM

'மக்காச்சோள வீரிய ஒட்டு ரக விதை உற்பத்தி செய்தால், ஏக்கருக்கு ஒரு லட்சம் ரூபாய் லாபம் ஈட்ட முடியும். விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சி அளித்து உதவ தயார்' என, கோவை வேளாண் பல்கலை அழைப்பு விடுத்துள்ளது.
கோவை வேளாண் பல்கலை பயிர் இனப்பெருக்கம் மற்றும் மரபியல் மைய இயக்குநர் ரவிகேசவன் கூறியதாவது:
நாட்டின் அனைத்து பகுதிகளிலும், அனைத்து பருவங்களிலும் சாகுபடி செய்து, நல்ல லாபம் தரும் ஒரே பயிர் மக்காச்சோளம்.
கால்நடை தீவனம், எத்தனால் உற்பத்தி என, தேவை அதிகம் என்பதால், எவ்வளவு விளைவித்தாலும், நிரந்தரமாக நல்ல விலை கிடைக்கிறது. இதனால், விதைக்கு தேவை அதிகரித்து வருகிறது. மக்காச்சோள வீரிய ஒட்டு ரக உற்பத்தியில், மிக நல்ல லாபம் ஈட்ட முடியும்.
வீரிய ஒட்டு ரக விதை உற்பத்தி
தனியார் வீரிய ஒட்டு ரகம் கிலோ 350 - 400 ரூபாய் வரை விற்கப்படுகிறது. வேளாண் பல்கலையில் 275 ரூபாய்க்கு கிடைக்கும். வேளாண் பல்கலையில் இருந்து, இதுவரை 11 வீரிய ஒட்டு ரகங்களும், வாகரை ஆராய்ச்சி மையத்திலிருந்து இரு ரகங்களும் வெளியிடப்பட்டு உள்ளன.
வீரிய ஒட்டு ரகங்கள், அயல் மகரந்த சேர்க்கை கொண்டவை. இந்த ரக விதை உற்பத்தியில், இரு முக்கிய விஷயங்கள் உள்ளன. முதலாவது பயிர் விலகு துாரம். அடுத்தது, பெண் ரகத்தில் இருக்கும் ஆண் பூக்களை அகற்றுவது.
ஒரு ஆண் பூவில் இருந்து 7 - 10 லட்சம் ரூபாய் வரை மகரந்த துகள்கள் இருக்கும். காற்றில் பரவும் என்பதால், இரு விதை உற்பத்தி வயல்களுக்கு இடையே 500 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். இதை பயிர் விலகு துாரம் என்கிறோம்.
விதை உற்பத்திக்கான மக்காச்சோள பயிர் நடவு செய்யப்பட்டு 20 நாட்கள் இடைவெளியில், மற்றொரு மக்காச்சோள விதைப்பயிரை நடவு செய்யலாம். இதனால், பூக்கும் காலம் மாறுபட்டு, மகரந்தச் சேர்க்கையில் தேவையற்ற கலப்பு நடக்காது.
ஆண், பெண் ரகங்கள்
வீரிய ஒட்டு ரக விதை உற்பத்திக்கு, ஆண் ரகம் இரு வரிசையும், பெண் ரகத்தில் நான்கு வரிசையும் விதைக்க வேண்டும்.
முதலில் பெண் ரகம் நான்கு வரிசையும், ஆண் ஒரு வரிசையும் விதைத்து விடலாம்.
மூன்றாவது நாளில் இரண்டாவது நீர் பாய்ச்சும் போது, ஆண் ரகத்தின் இரண்டாவது வரிசையை ஊன்றி விடலாம்.
இதனால், பெண் ரக சூல்முடி கொஞ்சம் தாமதமாக வந்தாலும், இரண்டாவதாக நடும் ஆண் ரகத்தில் உள்ள மகரந்தம், அந்த தாமதத்தை ஈடுகட்டி, மகரந்த சேர்க்கை நடக்கும். விதை உற்பத்தி பாதிக்காது.
பூவை அகற்றுதல்
வீரிய ஒட்டு ரகம் என்பதால், ஆண் ரகத்தில் இருந்து தான் பெண் சூல்முடிக்கு மகரந்தம் போக வேண்டும்.
பெண் ரகத்தில் இருந்தே செல்லக் கூடாது. எனவே, பெண் ரகத்தில் பூ வெளியே வருவதற்கு முன்பே, உருவி அகற்றி விட வேண்டும். தொடர்ந்து 10 - -15 நாட்களுக்கு மிக கவனமாக அகற்ற வேண்டும். ஒரு பூவைக் கூட விட்டு விடக்கூடாது. இதுதான் மிக முக்கியமான பணி.
அறுவடை
அறுவடையின் போது முதலில் ஆண் ரக கதிர்களை அகற்றி விட வேண்டும். இதனால், எஞ்சியிருப்பது வீரிய ஒட்டு ரக விதைகள் மட்டும் என்பது உறுதியாகி விடும். அவற்றை ஓரிரு நாட்களுக்கு பின், தனியே சேகரித்துக் கொள்ளலாம்.
ஏக்கருக்கு 800 - 900 கிலோ வீரிய ஒட்டு ரக விதையை உற்பத்தி செய்யலாம். விவசாயிகளே நேரடியாக விற்பனை செய்யலாம்.
விற்க முடியாதவற்றை கிலோ 150 - 170 ரூபாய்க்கு வேளாண் பல்கலையே திரும்ப வாங்கிக் கொள்ளும்.
இதனால், ஏக்கருக்கு ஒரு லட்சம் ரூபாய் லாபம் கிடைக்கும். விதை உற்பத்தி செய்ய விரும்பும் விவசாயிகள், வேளாண் பல்கலை அல்லது வாகரை ஆராய்ச்சி மையத்தை அணுகலாம்.
ஆண், பெண் ரகங்களைத் தனித்தனியாக கொடுப்போம். விதைக்கும் சமயத்தில் எங்கள் தரப்பில் ஒருவர் வந்து உதவுவார். பயிற்சியும் கொடுக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

