/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஒன்றிய குழு கூட்டத்தில் ஆளுங்கட்சி ஒன்றிய செயலர் கட்ட பஞ்சாயத்து! மக்கள் பிரதிநிதி அல்லாதவர் பங்கேற்றதால் அதிருப்தி !
/
ஒன்றிய குழு கூட்டத்தில் ஆளுங்கட்சி ஒன்றிய செயலர் கட்ட பஞ்சாயத்து! மக்கள் பிரதிநிதி அல்லாதவர் பங்கேற்றதால் அதிருப்தி !
ஒன்றிய குழு கூட்டத்தில் ஆளுங்கட்சி ஒன்றிய செயலர் கட்ட பஞ்சாயத்து! மக்கள் பிரதிநிதி அல்லாதவர் பங்கேற்றதால் அதிருப்தி !
ஒன்றிய குழு கூட்டத்தில் ஆளுங்கட்சி ஒன்றிய செயலர் கட்ட பஞ்சாயத்து! மக்கள் பிரதிநிதி அல்லாதவர் பங்கேற்றதால் அதிருப்தி !
ADDED : நவ 14, 2025 10:47 PM

ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுாரில் தி.மு.க., - வி.சி., இடையேயான உரசலை சரி செய்ய, ஒன்றிய குழு கூட்டத்தில், மக்கள் பிரதிநிதி அல்லாத தி.மு.க., ஒன்றிய செயலர் பங்கேற்று, அதிகாரிகள் முன்னிலையில், கட்டப் பஞ்சாயத்து நடத்தியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஸ்ரீபெரும்புதுார் ஒன்றிய குழு சாதாரண கூட்டம், தி.மு.க., ஒன்றிய குழு தலைவர் கருணாநிதி தலைமையில், வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர் பவானி, ஒன்றிய குழு துணை தலைவர், கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
ஒன்றிய குழு கூட்டங்களில், தி.மு.க., ஒன்றிய குழு தலைவர் கருணாநிதி மீது, இரண்டாவது வார்டு வி.சி., கவுன்சிலர்தியாகராஜன், அடுக்கடுக்கான பல புகார்களை தெரிவித்து வந்தார். ஒன்றிய குழு தலைவருக்கு எதிராக வி.சி.,க்கள் சார்பில், கடந்த மாதம், பேருந்து நிலையம் முன் ஆர்ப்பாட்டமும் நடந்தது.
இதனால், ஸ்ரீபெரும்புதுாரில், கூட்டணி கட்சிகளான தி.மு.க., - வி.சி., இடையே உரசல் நிலவி வந்தது. இதை சரி செய்யும் வகையில், மக்கள் பிரதிநிதி அல்லாத, தி.மு.க.,வில் ஒன்றிய செயலராக உள்ள கோபால் பங்கேற்றார்.
அவரை முன்னிறுத்தியே, ஒன்றிய தலைவர் கருணாநிதி கூட்டத்தை நடத்தினார். இது, தி.மு.க., அல்லாத கவுன்சிலர்கள் இடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதுகுறித்து, கவுன்சிலர்கள் பலரும் கேள்வி எழுப்பினர்.
கூட்டத்தில் சர்ச்சை ஏற்படுவதை உணர்ந்த ஒன்றிய குழு தலைவர், கூட்டம் துவங்கிய சில நிமிடங்களிலே, பத்திரிகையாளர்களை வெளியேற்றினார். கூட்ட அரங்கு கதவுகள் இழுத்து மூடப்பட்டன.
கூட்டத்தில் பங்கேற்க தாமதமாக வந்த, வனத்துறை அதிகாரிகள் மற்றும் வேளாண் துறை அலுவலர்கள், கதவை தட்டியும் திறக்கப்படவில்லை. இதனால், கூட்டம் முடியும் வரை அவர்கள் வெளியில் காத்துக்கிடந்தனர்.
ரகசியமாக நடந்த ஒன்றிய குழு கூட்டத்தில், மோதல் போக்கு தொடரும் நிலையில், தி.மு.க., - வி.சி., கவுன்சிலர்களை கைகோர்க்க வைக்கும் வகையில், கோபால் சமரச பேச்சு நடத்தினார்.
இருதரப்பிலும் உரசல் ஏன் ஏற்பட்டது; வீதிக்கு வந்து வி.சி.,க்கள் போராடியது ஏன் என விசாரித்து, ஒன்றிய செயலர் நீண்ட நேரம் கட்டப் பஞ்சாயத்து செய்துள்ளார்.
அப்போது, பல்வேறு பேரங்களும் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இவை அனைத்தும், வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலையில் நடந்தது.
இந்த பஞ்சாயத்துக்கு இடையே, ஒன்றிய குழு கூட்டத்தில், மக்கள் நலன் சார்ந்த பல்வேறு பணிகளுக்கான 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்கும் ஒன்றிய குழு கூட்டத்தில், மக்கள் பிரதிநிதி அல்லாத தி.மு.க., ஒன்றிய செயலர் பங்கேற்றது, மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இது, தவறான முன்னுதாரணம்; இது தொடர்பாக காஞ்சிபுரம் கலெக்டர் விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அ.தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.
அதிகார துஷ்பிரயோகம் ஒன்றிய குழு கூட்டத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் மற்றும் அதிகாரிகள் மட்டுமே பங்கேற்க வேண்டும். கடந்த 2021 தேர்தலில், தி.மு.க., சார்பில், காட்டரம்பாக்கம் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட, தி.மு.க., தெற்கு ஒன்றிய செயலர் கோபால், அ.தி.மு.க.,வைச் சேர்ந்த சத்யா என்பவரால் தோற்கடிக்கப்பட்டார். தற்போது, தி.மு.க., ஒன்றிய செயலர் என்பதனாலேயே, கூட்டத்தில் அனுமதித்ததுடன், அவையில், ஒன்றிய குழு தலைவர் அருகே அமர வைத்தது அதிகார துஷ்பிரயோகம். இது, அரசியல் அமைப்பு சட்டத்திற்கே எதிரானது. - எஸ். செந்தில்ராஜன், காஞ்சிபுரம் மாவட்ட அ.தி.மு.க., துணை செயலர்.

