காஞ்சியில் 200க்கும் மேற்பட்டோரின் பட்டாவில்.... குளறுபடி!:சொத்துக்களை கிரையம் செய்ய முடியாமல் தவிப்பு
காஞ்சியில் 200க்கும் மேற்பட்டோரின் பட்டாவில்.... குளறுபடி!:சொத்துக்களை கிரையம் செய்ய முடியாமல் தவிப்பு
ADDED : ஜூலை 06, 2026 03:20 AM

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் நகரில் பட்டா பதிவுகள் முழுமையாக 'ஆன்லைன்' மயமாக்கப்பட்ட பின், ஏற்பட்ட தொழில்நுட்ப மற்றும் பதிவு பிழைகள் காரணமாக, பிள்ளையார்பாளையம் பகுதியைச் சேர்ந்த, 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வீடுகளை அடமானம் வைப்பது, கிரையம் செய்வது, வங்கிக் கடன் பெறுவது போன்ற அடிப்படை சொத்து பரிவர்த்தனைகள் முடங்கியுள்ளதாக பாதிக்கப்பட்டோர் தெரிவித்துள்ளனர்.
காஞ்சிபுரம் நகரில் நகர நிலவரி திட்டத்தின் கீழ், வீடுகளுக்கும், மனைகளுக்கான உட்பிரிவு பட்டா வழங்குதல், உரிமையாளர் பெயர் மாற்றம் உள்ளிட்ட பணிகளை வருவாய் துறையினர் பல ஆண்டுகளாக மேற்கொண்டு வந்தனர்.
இதில் சர்வே துறையின் பங்கும் முக்கிய மானதாக இருந்தது.
நகர்ப்புற பட்டாக்கள் நீண்ட காலமாக ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படாமல் இருந்த நிலையில், நகரில் உள்ள, 42,000த்துக்கும் மேற்பட்ட பட்டா பதிவுகளை, மின்னணு வடிவத்திற்கு மாற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது.
வாழ்வாதாரம்
சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன் அந்தப் பணி நிறைவடைந்ததையடுத்து, பட்டா மாற்றம் உள்ளிட்ட அனைத்து சேவைகளும், ரெகுலர் தாசில்தார் மூலம் ஆன்லைன் முறையில் வழங்கப்பட்டு வருகின்றன.
ஆனால், இந்த மாற்றத்தின் போது ஏற்பட்ட பதிவுப் பிழைகள் தற்போது நுாற்றுக்கணக்கான சொத்து உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தையே பாதிக்கும் நிலையை உருவாக்கியுள்ளது.
பிள்ளையார்பாளையம் பகுதியில் உள்ள சேர்மன் சாமிநாதன் தெருவைச் சேர்ந்த, 100க்கும் மேற்பட்டோரின் பட்டாக்களில், உரிமையாளர் பெயர், சர்வே எண் உள்ளிட்ட விபரங்கள் சரியாக இருந்தாலும், தெரு பெயர் தவறாக 'மாதனம்பாளையம் தெரு' என பதிவாகிஉள்ளது.
ஆன்லைன் பட்டாவை பதிவிறக்கம் செய்த பிறகே இந்தப் பிழை தெரியவந்ததாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
இந்த தவறான பதிவு காரணமாக, வங்கிகள் மற்றும் பதிவு அலுவலகங்களில் பட்டா முகவரி முரண்பாடு சுட்டிக்காட்டப்படுவதால், வீட்டு அடமானம், வங்கிக் கடன், சொத்து கிரையம் உள்ளிட்ட பணிகள் தடைபட்டு வருகின்றன.
பட்டா திருத்தம் கோரி பாதிக்கப்பட்டோர் தொடர்ந்து வருவாய் துறை அலுவலகங்களுக்கு அலைந்து திரிந்தும், இதுவரை நிரந்தர தீர்வு கிடைக்கவில்லை என குற்றம்சாட்டுகின்றனர்.
அதுமட்டுமல்லாமல், அதே பகுதியில் வசிக்கும் மேலும், 100க்கும் மேற்பட்டோரின் பட்டா விபரங்கள் ஆன்லைன் பதிவேற்றத்தின்போது முழுமையாக விடுபட்டிருப்பதும் புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
ஏமாற்றம்
பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த பட்டாக்கள், ஆன்லைன் பதிவுகளில் இல்லாததால், தங்களது சொத்துக்கான உரிமையை நிரூபிக்கவே மக்கள் சிரமப்படுகின்றனர்.
இந்த விடுபட்ட பட்டாக்கள் குறித்து காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் ஆய்வு செய்து அறிக்கை தயாரித்து, காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பியுள்ளனர்.
இருப்பினும், மூன்று ஆண்டுகள் கடந்தும் அந்த பதிவுகள் இன்னமும் ஆன்லைனில் சேர்க்கப்படாததால், பாதிக்கப்பட்ட குடும்பங்கள் கடும் ஏமாற்றத்தில் உள்ளனர்.
பட்டா என்பது ஒரு சொத்தின் முக்கிய வருவாய் ஆவணமாக கருதப்படும் நிலையில், அதில் உள்ள தகவல்கள் சரியாக இருந்தால் மட்டுமே வங்கிகளில் கடன் பெறுதல், சொத்து விற்பனை, கிரையப் பதிவு, சட்டப்பூர்வ பரிவர்த்தனைகள் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள முடியும்.
ஆனால், பதிவுப் பிழைகள் காரணமாக நுாற்றுக்கணக்கான குடும்பங்கள் தங்களது சொத்துக்களை பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.
எனவே, பட்டா குளறுபடிகளை வருவாய்த் துறையினர் சிறப்பு முகாம் நடத்தி விரைந்து சரிசெய்து, மூன்று ஆண்டுகளாக நீடித்து வரும் மக்களின் அவதிக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
மாற்றம்
இதுகுறித்து, வருவாய் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
விடுபட்ட பட்டா விபரங்களை ஏற்கனவே நாங்கள் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பிவிட்டோம்.
அதில், சர்வே எண்ணில் உள்ள பட்டாவின் நீளம், அகலம் போன்ற விபரங்களை துல்லியமாக பதிவு செய்து கொடுக்க, அந்த கோப்புகள் திரும்ப வந்துள்ளன. அதற்கான பணிகள் தற்போது நடக்கின்றன.
விரைவில் விடுப்பட பட்டா விபரங்கள் கோட்டாட்சியர் அலுவலகம் வாயிலாக சேர்க்கப்படும். அதேபோல், தெரு பெயர் மாறிய பட்டாக்களில், உரிமையாளர் ஆன்லைனில் விண்ணப்பித்தால், உடனடியாக தெரு பெயர் மாற்றி தரப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
