/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
10 ஆண்டுக்கு பின் உத்திரமேரூர் பைபாஸ் சாலைக்கு...விமோசனம்!:பணிகளை துவக்க தமிழக அரசு ரூ.35 கோடி ஒதுக்கீடு
/
10 ஆண்டுக்கு பின் உத்திரமேரூர் பைபாஸ் சாலைக்கு...விமோசனம்!:பணிகளை துவக்க தமிழக அரசு ரூ.35 கோடி ஒதுக்கீடு
10 ஆண்டுக்கு பின் உத்திரமேரூர் பைபாஸ் சாலைக்கு...விமோசனம்!:பணிகளை துவக்க தமிழக அரசு ரூ.35 கோடி ஒதுக்கீடு
10 ஆண்டுக்கு பின் உத்திரமேரூர் பைபாஸ் சாலைக்கு...விமோசனம்!:பணிகளை துவக்க தமிழக அரசு ரூ.35 கோடி ஒதுக்கீடு
ADDED : ஏப் 26, 2024 10:56 PM
காஞ்சிபுரம்:உத்திரமேரூர் புறவழிச்சாலை அமைக்கும் பணிகள், 10 ஆண்டுகளாக இழுபறியாக நீடித்த நிலையில், நில எடுப்பு பணிகள் முடிந்ததால், புறவழிச்சாலை அமைப்பதற்கு, தமிழக அரசு 35 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. இதன் மூலம், புறவழிச்சாலை பணி விரைவில் துவக்கப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் நகரில், 40,000த்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
உத்திரமேரூர் மற்றும் சுற்றியுள்ள 30க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 1,000த்துக்கும் மேற்பட்டோர் உத்திரமேரூர் வழியாக, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யாறு, வந்தவாசி, சென்னை உள்ளிட்ட பல பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
கடும் நெரிசல்
உத்திரமேரூர் பஜார் சாலை மிகவும் குறுகியதாக உள்ளதால், காலை - மாலை நேரங்களில் தினமும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என்பது பல ஆண்டு கோரிக்கையாக இருந்து வந்தது.
இதனால், 2013ல், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, உத்திரமேரூரில் புறவழிச்சாலை அமைக்கப்படும் என, அறிவிப்பு வெளியிட்டார்.
உத்திரமேரூர் புறவழிச்சாலை, ஏ.பி., சத்திரம் அருகே துவங்கி, மல்லிகாபுரம் விவசாய நிலங்கள் வழியாக, 4.2 கி.மீ., துாரத்திற்கு வேடபாளையம் சாலையில் வந்து இணையும்படி திட்டமிடப்பட்டுள்ளது.
சாலை அமையும் இடங்களில், நில எடுப்பு பணிகளுக்கு, முதற்கட்டமாக 7 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
நிலம் அளவீடு செய்வது, தனியாரின் நிலம், வீடுகளை கையகப்படுத்துதல், நில உரிமையாளர்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்குவது ஆகியவற்றால், கடந்த 10 ஆண்டுகளாக வருவாய்த் துறையும், நெடுஞ்சாலைத்துறையும் மெத்தனம் காட்டி வந்தனர்.
வேடபாளையம் உள்ளிட்ட பிற கிராமங்களில் இழப்பீடு வழங்கிய நிலையில், உத்திரமேரூர் ஏ, பி ஆகிய கிராமங்களில் 70க்கும் மேற்பட்டோருக்கு இழப்பீடு வழங்க வேண்டிய நிலை இருந்து வந்தது.
இதற்கு, 26 கோடி ரூபாய் தேவை என, முதலில் கணக்கிடப்பட்டது. இந்த நிதிக்காகவே பல ஆண்டுகள் அதிகாரிகள் காத்திருந்தனர். கடந்தாண்டு, 26 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்கியது.
புறவழிச்சாலை
ஆனால், அரசு ஒதுக்கிய 26 கோடி போதவில்லை என, வருவாய்த்துறை மீண்டும் தெரிவித்தது. புதிய நில எடுப்பு சட்டத்தின்படி, உத்திரமேரூர் 'அ' மற்றும் 'ஆ' ஆகிய கிராமங்களில் நில எடுப்பு செய்ய, 52 கோடி ரூபாய் தேவைப்படுவதாக வருவாய்த் துறை தெரிவித்தது.
இதையடுத்து, வருவாய் துறை கேட்ட, 52 கோடி ரூபாயையும் கடந்தாண்டு தமிழக அரசு ஒதுக்கியது. ஒரு வழியாக, நில எடுப்புக்கு தேவையான நிதியை வழங்கி, அவற்றை பயனாளிகளுக்கு வழங்கும் பணிகள் பெரும்பாலும் முடிந்துவிட்டன.
நில எடுப்பு பணிகள் முடிந்த நிலையில், சாலை அமைக்கும் பணிகள் துவங்குமென எதிர்பார்க்கப்பட்டன. அதன்படி, உத்திரமேரூர் புறவழிச்சாலைக்கு புதிதாக சாலை அமைக்க, தமிழக அரசு 35 கோடி ரூபாயை ஒதுக்கிஉள்ளது.
தற்போது, சாலை அமைப்பதற்கான, 'டெண்டர்' பணிகள் நடைபெற்று வருகின்றன. டெண்டர் இறுதி செய்யப்பட்ட பின், ஒன்று முதல் ஒன்றரை ஆண்டுகளில் சாலை பணிகள் முடியும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் வாயிலாக, 10 ஆண்டுகளாக இழுபறி நீடித்த உத்திரமேரூர் புறவழிச்சாலை திட்டத்திற்கு இறுதி வடிவம் கிடைத்துள்ளது.
இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரி கூறியதாவது:
புறவழிச்சாலை அமையும் இடத்தில், ஐந்து சந்திப்புகள் வர உள்ளன. காஞ்சிபுரம் சாலை, வேடபாளையம், ஏ.பி., சத்திரம், எம்.ஜி.ஆர்., நகர் மற்றும் காக்கநல்லுார் ஆகிய இடங்களில் சந்திப்புகள் வர உள்ளன.
25 சிறுபாலங்கள்
இச்சாலை பணிகள், ஒன்றரை ஆண்டுகளில் முடிந்து பயன்பாட்டிற்கு வந்துவிடும். நில எடுப்பு பணிகள் முடிந்ததால், சாலை அமைக்க நிதி வழங்கப்பட்டுள்ளது.
புறவழிச்சாலை அமையும் 4.2 கி.மீ., துாரத்தில் பாசன கால்வாய், சாலை சந்திப்பு ஆகிய இடங்களில், 25 சிறுபாலங்கள் அமைக்க திட்டமிட்டு உள்ளோம்.
வழக்கமான சாலையின் உயரத்தில் இருந்து, 1.5 மீட்டர் உயரத்தில் புறவழிச்சாலை அமையும். இதன் வாயிலாக, உத்திரமேரூர் டவுன் உள்ளே வாகனங்கள் செல்லாமல், புறவழிச்சாலை வழியாக விரைந்து செல்ல முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.

