ADDED : செப் 02, 2026 05:55 AM

ஓசூர்:கிருஷ்ணகிரி
மாவட்டம், ஓசூர் தேர்ப்பேட்டையில், மரகதாம்பாள் உடனுறை
சந்திரசூடேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான தெப்பக்குளம் உள்ளது.
இங்கு ஆண்டுதோறும் மார்ச் மாதம் நடக்கும் தேர்த்திருவிழாவின் போது,
தெப்பல் உற்சவம் நடக்கும்.
இக்குளத்தை ஹிந்து சமய அறநிலையத்துறை
பராமரிப்பில்லாததால், கழிவு மற்றும் கழிவு நீர் சேர்ந்து, குளம்
மோசமாகி அருகில் செல்ல முடியாத அளவிற்கு துர்நாற்றம் வீசுகிறது.
தொற்று நோய் பரவும் இடமாக மாறியுள்ளது. எனவே, ஹிந்து சமய
அறநிலையத்துறை, குளத்தை சுத்தம் செய்ய, பக்தர்கள் வலியுறுத்தி
வருகின்றனர்.கடந்த மாதம், 21ம் தேதி, ஹிந்து சமய அறநிலையத்துறை,
பெயரளவிற்கு தெப்பக்குளத்தை சுத்தம் செய்தது. அதுவும் புனிதமாக
கருதப்படும் இந்த குளத்தை சுத்தம் செய்ய, செப்டிக் டேங்க் வாகனத்தை
வரவழைத்து, அதன் மூலமாக பெயரளவிற்கு மேலோட்டமாக இருந்த மோசமான
தண்ணீர் மட்டும் உறிஞ்சி எடுக்கப்பட்டது. இது பக்தர்களை கொதிப்படைய
செய்துள்ளது. புனிதமான கோவில் தெப்பக்குளத்தை சுத்தம் செய்ய
வேண்டும் என்ற பக்தர்களின் கோரிக்கை வலுத்துள்ள நிலையில்,
மரகதாம்பாள் உடனுறை சந்திரசூடேஸ்வரர் கோவில் நிர்வாகம் தரப்பில்,
தர்மபுரி ஹிந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனர் அலுவலகத்திற்கு
பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
ஆனால், இந்த பரிந்துரை கிணற்றில்
போட்ட கல்லாக உள்ளது. கோவில் தெப்பக்குளத்தின் நீர் முழுவதையும்
வெளியேறி, துார்வாரி சுத்தம் செய்த பின், கோவில் குளத்தில் நீரை
நிரம்பி, சுற்றியுள்ள குடியிருப்பு கழிவுகள் மற்றும் இதர கழிவு
பொருட்கள் தெப்பக்குளத்திற்குள் வராமல் தடுத்தால் மட்டுமே,
நிரந்தரமாக கோவில் தெப்பக்குளம் சுத்தமாக இருக்கும். அதற்கு ஹிந்து
சமய அறநிலையத்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க, கோரிக்கை
எழுந்துள்ளது.
