ADDED : ஆக 26, 2024 07:01 AM

கொட்டாம்பட்டி: மேலுார் தாலுகா முழுவதும் பல நுாறு அடிக்கு போர்வெல் அமைத்தாலும் குறிப்பிட்ட நாட்கள் மட்டுமே தண்ணீர் கிடைக்கும். வறட்சி காலத்தில் போதுமான அளவு தண்ணீர் கிடைக்காது. ஆனால் கேசம்பட்டி ஊராட்சி வெள்ளிமலைபட்டியில் முறிமலை அடிவாரத்தில் 2 அடியில் கையினால் தோண்டிய சிறிது நேரத்தில் தெளிவான, சுவையான தண்ணீர் கிடைக்கிறது.
ஆண்டு தோறும் தண்ணீர் கிடைப்பதால் புலிப்பட்டி, கேசம்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் இங்கு வந்து குடிநீருக்காக எடுத்து செல்கின்றனர். ஆண்டு தோறும் வற்றாத ஜீவநதியாக தண்ணீர் கிடைப்பதால், புதுமணப் பெண்கள் இக்கிராமத்திற்கு வந்ததும், இங்கு வெற்றிலை பாக்கு வைத்து வணங்கி தண்ணீர் எடுத்துச் செல்லும் வழக்கத்தை கடைப்பிடிக்கின்றனர்.
அதேசமயம் இங்கு 2 அடிக்கு மேல் தோண்டினால் தண்ணீர் வராது என்பதும் வியப்பை வரவழைக்கிறது.

