/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கள்ளர் பள்ளிகளை சீரமைக்கும் எண்ணம் தி.மு.க.,வுக்கு இல்லை
/
கள்ளர் பள்ளிகளை சீரமைக்கும் எண்ணம் தி.மு.க.,வுக்கு இல்லை
கள்ளர் பள்ளிகளை சீரமைக்கும் எண்ணம் தி.மு.க.,வுக்கு இல்லை
கள்ளர் பள்ளிகளை சீரமைக்கும் எண்ணம் தி.மு.க.,வுக்கு இல்லை
ADDED : ஆக 26, 2024 09:37 AM
மதுரை : 'தமிழகத்தில் கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை மேம்படுத்தவும், அங்கு நிலவும் நிர்வாக சீர்கேடுகளுக்கு தீர்வுகாணும் எண்ணமும் தி.மு.க.,வுக்கு இல்லை' என கள்ளர் சீரமைப்பு ஆசிரியர் - அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
'பள்ளிக் கல்வித்துறையுடன் கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை இணைத்து பள்ளிகள், விடுதிகளை முடக்க தி.மு.க., நடவடிக்கை எடுக்கிறது' என அ.தி.மு.க., குற்றம்சாட்டி, உண்ணாவிரத போராட்டத்தை நடத்தியுள்ளது.
அதேநேரம் 'அதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. கள்ளர் பள்ளிகளை மேம்படுத்த தேவையான திட்டங்கள், நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன ' என தமிழக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அ.தி.மு.க., தி.மு.க., என இரண்டு கட்சிகளும் அரசியல் நோக்கத்திற்காகவே கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை கையில் எடுத்துள்ளன.
'இப்பள்ளிகளை சீரமைக்கும் எண்ணம் தி.மு.க.,வுக்கு இல்லை' என கள்ளர் சீரமைப்பு ஆசிரியர் - அரசு ஊழியர் சங்க கூட்டமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.
இதுகுறித்து கூட்டமைப்பு நிர்வாகிகள் கூறியதாவது: இத்துறை பள்ளிகளை சீரமைக்க பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் பயன் இல்லை. அ.தி.மு.க., தற்போது இவ்விஷயத்தை கையில் எடுத்துள்ளது. அக்கட்சி ஆட்சியில் இருந்தபோது கண்டுகொள்ளவில்லை. தற்போது எதிர்கட்சியாக உள்ளதால் அரசியலுக்காக உண்ணாவிரதம், போராட்டம் என கையில் எடுத்துள்ளனர். ஆனால் தி.மு.க.,வுக்கு இதுபோன்ற எண்ணம்கூட இல்லை.
மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் 299 பள்ளிகளில் 24 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயில்கின்றனர். இதற்கான இணை இயக்குநர் அலுவலகம் மதுரையில் உள்ளது.
இங்கு கல்வி அலுவலர் (இ.ஓ.,) பணியிடம், இணை இயக்குநரின் நேர்முக உதவியாளர் பணியிடம் 5 ஆண்டுகளாக காலியாக உள்ளது.
தொடக்க பள்ளிகளை கண்காணிக்க வேண்டிய 6 பி.இ.ஓ.,க்களில் ஒருவர் மட்டுமே உள்ளார். பிற பணியிடங்கள் ஓராண்டாக காலியாக உள்ளன. இதுதவிர 40 மேல்நிலையில் 17 பள்ளிகள் 5 முதுகலை ஆசிரியர்களுடன் செயல்படுகிறது. பல பாடப்பிரிவுகளுக்கு ஆசிரியர் இல்லை. 50க்கும் மேற்பட்ட பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் இல்லை.
மூன்று ஆண்டுகளுக்கு முன் துவங்கிய உண்டுஉறைவிட பள்ளிகளுக்கு இதுவரை கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படவில்லை. மாறாக பொது விடுதிகளில் இயங்கி வருகின்றன.
இயக்குநர் அலுவலக துணை இயக்குநர் பணியிடத்தில் சி.இ.ஓ., இயக்குநர், கமிஷனர் நேர்முக உதவியாளராக அமைச்சுப் பணியாளர்களுக்கு பதில் மேல்நிலை தலைமையாசிரியர்கள் நியமிக்கப்பட்டால் பல நிர்வாக பிரச்னைகளுக்கு தீர்வுகிடைக்கும் என்றனர்.

