ADDED : பிப் 10, 2025 04:54 AM
பேரையூர்: பேரையூர் பகுதிகளில் கோடை துவங்கும் முன்பே வெயில் தாக்கம் அதிகரித்து வருவதால் வெள்ளரி விற்பனைக்கு வந்துள்ளது.
இரவில் தொடரும் பனி காலை 8:00 மணி வரை நீடிக்கிறது. காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை வெயில் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதையடுத்து வெள்ளரிக்காய்கள் அதிகளவில் விற்பனைக்கு வந்துள்ளது. பேரையூர் தாலுகாவில் அதிக அளவில் வெள்ளரிக்காய் சாகுபடி செய்யப்படுகிறது. இதில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. இதனை உண்பதால் தாகம் தணிவதுடன், உடல் சூட்டையும் குறைக்கும். அதிக மருத்துவ குணங்கள் உள்ளன. இதனால் இதனை பலரும் விரும்பி வாங்கி செல்கின்றனர்.
விவசாயிகள் கூறுகையில், ''கண்மாய் ஓரங்கள், அதனையொட்டிய நிலங்களிலும் வெள்ளரி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது அறுவடைக்கு வந்துள்ளது. எட்டு வெள்ளரிப் பிஞ்சுகளை ரூ. 20 க்கு விற்கிறோம்'' என்றனர்.

