/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மாநகராட்சிகளில் குப்பை அகற்றும் பணி; 'அவுட்சோர்சிங்'கிற்கு எதிராக வழக்கு உயர்நீதிமன்றம் தள்ளுபடி
/
மாநகராட்சிகளில் குப்பை அகற்றும் பணி; 'அவுட்சோர்சிங்'கிற்கு எதிராக வழக்கு உயர்நீதிமன்றம் தள்ளுபடி
மாநகராட்சிகளில் குப்பை அகற்றும் பணி; 'அவுட்சோர்சிங்'கிற்கு எதிராக வழக்கு உயர்நீதிமன்றம் தள்ளுபடி
மாநகராட்சிகளில் குப்பை அகற்றும் பணி; 'அவுட்சோர்சிங்'கிற்கு எதிராக வழக்கு உயர்நீதிமன்றம் தள்ளுபடி
ADDED : டிச 02, 2025 04:28 AM
மதுரை: மாநகராட்சி, நகராட்சிகளில் குப்பைகளை அகற்றும் பணியில் தனியார் அவுட்சோர்சிங் மூலம் தொழிலாளர்களை ஈடுபடுத்துவதற்கு எதிராக தாக்கலான வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.
கடையநல்லுார் அருகே கிருஷ்ணாபுரம் அருள்ராஜ் தாக்கல் செய்த பொதுநல மனு: திடக்கழிவு மேலாண்மை பணியை மாநகராட்சி, நகராட்சிகளில் தனியார் ஒப்பந்ததாரர்கள் மூலம் மேற்கொள்வதற்கான அனுமதியை நகராட்சி நிர்வாக இயக்குனர் 2023 ல் வழங்கினார். இதனடிப்படையில் பணியை மாநகராட்சிகள், நகராட்சிகள் தனியாரிடம் ஒப்படைத்தன. ஆண்டுதோறும் மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் துாய்மைப்பணியை மேற்கொள்ள கோடிக்கணக்கான ரூபாய் இத்தனியார் ஒப்பந்ததாரர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
ஒப்பந்ததாரர்கள் டெண்டர் நிபந்தனைகள்படி செயல்படுவதில்லை. குறிப்பிட்ட எண்ணிக்கையிலான தொழிலாளர்களுடன் பணிபுரிவதற்கு பதிலாக, குறைந்த தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்துகின்றனர். தேவையான உபகரணங்கள் அல்லது வாகனங்கள் இருப்பதில்லை.
துாய்மைப் பணியாளர்களின் கல்வியறிவின்மையை பயன்படுத்திக் கொண்டு குறைந்தபட்ச ஊதியம், பி.எப்.,- இ.எஸ்.ஐ., பலன்களை வழங்குவதில்லை. ஒப்பந்ததாரர்களுக்கு அதிக தொகை ஒதுக்கீடு செய்வதால் மாநகராட்சி, நகராட்சிகளின் கடன் சுமை அதிகரித்துள்ளது.திடக்கழிவு மேலாண்மை பணியை நிறுவனம் அல்லது ஒப்பந்ததாரர் மூலம் செயல்படுத்துவதை ரத்து செய்ய வேண்டும். துாய்மைப் பணியாளர்களை தற்காலிகமாக நியமிப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். மூன்று ஆண்டுகள் பணி பூர்த்தி செய்த தற்காலிக பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். துாய்மைப் பணியில் தனியார் 'அவுட்சோர்சிங்' மூலம் தொழிலாளர்களை நியமிக்கும் முடிவை ரத்து செய்யக்கோரி தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை செயலருக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு விசாரித்தது.
அரசு பிளீடர் திலக்குமார்,'இது அரசின் கொள்கை முடிவு சம்பந்தப்பட்டது,' என்றார்.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: இது பணியாளர்கள் சம்பந்தப்பட்ட வழக்கு. பொதுநல வழக்காக கருத முடியாது. தள்ளுபடி செய்யப்படுகிறது என்றனர்.

