/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
முதல்வரின் ‛ தேர்தல் 'கணக்கில்' மதுரை நிகழ்ச்சிகள்; ஓட்டுகளை அள்ளித்தருமா திட்டங்கள்
/
முதல்வரின் ‛ தேர்தல் 'கணக்கில்' மதுரை நிகழ்ச்சிகள்; ஓட்டுகளை அள்ளித்தருமா திட்டங்கள்
முதல்வரின் ‛ தேர்தல் 'கணக்கில்' மதுரை நிகழ்ச்சிகள்; ஓட்டுகளை அள்ளித்தருமா திட்டங்கள்
முதல்வரின் ‛ தேர்தல் 'கணக்கில்' மதுரை நிகழ்ச்சிகள்; ஓட்டுகளை அள்ளித்தருமா திட்டங்கள்
ADDED : டிச 09, 2025 06:59 AM

மதுரை: தமிழக சட்டசபை தேர்தலுக்கான அறிவிப்பு சில மாதங்களில் வெளியாக உள்ளது. இதனை எதிர்பார்த்து கூட்டணி சேர்ப்பதில் அரசியல் கட்சிகள் ஆடு, புலி ஆட்டம் ஆடுகின்றன. விஜயின் த.வெ.க., வருகையால் தி.மு.க.,வும் நிறைய போராட வேண்டி இருக்கிறது.
இதனால் தி.மு.க., தனது நடவடிக்கையில் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. தேர்தல் அறிவிப்பு வருவதற்குள் மாநில அளவில் உள்ள திட்டங்களை விரைந்து முடிக்கவும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் முதல்வர் ஸ்டாலின் ஆர்வம் காட்டுகிறார். மற்றொருபுறம் துணை முதல்வர் உதயநிதியும் மாவட்டம் தோறும் 'விசிட்' செய்து பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.
திருப்பரங்குன்றம் பிரச்னை இந்நிலையில் சமீபத்தில் திருப்பரங்குன்றத்தில் மலை உச்சியில் தீபம் ஏற்றும் பிரச்னை தி.மு.க.,வுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. உயர்நீதி மன்ற தீர்ப்பின் அடிப்படையில் தீபம் ஏற்றக்கூட அனுமதித்து இருக்கலாம். ஆனால் விஜயின் வருகையால் சிறுபான்மையினர் ஓட்டுக்களில் சேதம் வந்துவிடுமோ என்ற எண்ணத்தில், நீதிமன்ற அவமதிப்புக்கு ஆளாகும் அளவுக்கு சென்றுவிட்டதாக கட்சியினரே கவலைப்படு கின்றனர்.
நேற்றுமுன்தினம் மதுரையில் சில நிகழ்ச்சிகளில் முதல்வர் பங்கேற்றார். காலையில் ஒரு கட்சி நிறுவனரின் இல்ல திருமண நிகழ்ச்சியில் முதல்வர் பங்கேற்றார். சிறிய கட்சியாக இருந்தாலும் தென்மாவட்டத்தின் ஒரு சமுதாய பிணைப்புக்காக அதையும் விடாமல் அரவணைத்துள்ளார்.
தென்மாவட்டங்களில் உள்ள அந்த கட்சியின் சமுதாய ஓட்டுக்களை கிருஷ்ணசாமியும், ஜான்பாண்டியனும், இளைஞர்கள் ஓட்டுக்களை விஜயும் தக்கவைத்துள்ளதால், சிறிய கட்சியாக இருந்தாலும் விழாவில் பங்கேற்று அரவணைத்துக் கொண்டார்.
அடுத்து நடந்தது மேலமடை பாலம் திறப்பு. இந்த பாலத்திற்கு 2023 ல் முதல்வர்தான் அடிக்கல் நாட்டினார். அதனால் அதை தேர்தலுக்கு முன் முடித்தாக வேண்டும் என்று உத்தரவிட்டு, அமைச்சர் எ.வ.வேலு மூலம் பணிகளை முடுக்கிவிட்டார்.
அதையும் உரியநேரத்தில் திறந்து சாதித்ததுடன், அதற்கு யாரும் எதிர்பார்க்காத வகையில் வீரமங்கை வேலுநாச்சியார் பெயரையும் சூட்டிவிட்டார். இங்குதான் அவரது அனுபவ ஆட்டம் வெளிப்பட்டது. அதாவது விஜய் தனது த.வெ.க.,வின் கொள்கை தலைவர்களில் ஒருவராக வேலுநாச்சியாரை அறிவித்துள்ளார்.
அதை முறியடிக்கும் வகையில் மதுரையில் இருந்து சிவகங்கை செல்லும் ரோடு பாலத்திற்கு வீரமங்கை வேலுநாச்சியார்' பெயரிட்டால் பொருத்தமாக இருக்கும் என்றெண்ணி தேர்தலையும் கணித்து செயல்பட்டுள்ளார் முதல்வர்.
அதேபோல மதுரை கோரிப்பாளையம் பகுதியில் கட்டப்படும் மேம்பால பணிகளை தேர்தலுக்கு முன் முடிக்கும் வகையில் பணிகளை முடுக்கி விட்டுள்ளனர். அமைச்சர் எ.வ.வேலு அடிக்கடி நேரில் பார்வையிட்டு வருகிறார். இப் பாலத்தின் ஒருபகுதியை வரும் ஜனவரி இறுதிக்குள் திறக்க எண்ணியுள்ளனர். செல்லுார் பகுதிக்கு பிரியும் பாலத்தை மார்ச் இறுதிக்குள் முடிக்க திட்ட மிட்டுள்ளனர்.
இப்பாலம், நகரின் முக்கிய அடையாளமாக உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலை அருகே செல்வதால் அவரது பெயரையே சூட்ட அரசு திட்டமிட்டுள்ளது. இதுவும் முக்குலத்தோர் ஓட்டுக்களை பெற்றுத்தரும் என்பது தேர்தல் கணக்கு.
புதிய திட்டங்கள் அறிவிப்பு அப்புறம் நடந்தது நலத்திட்டம் வழங்கும் விழா. இதில் கணிசமான ஓட்டுகளை கவரும் வகையில், அதிகளவாக ஒருலட்சம் பேருக்கு பட்டா வழங்க முடிவெடுத்து ஆட்களை திரட்டினர் அதிகாரிகள். குடியிருப்போர் சங்கங்கள், வீட்டுவசதி வாரிய திட்டங்கள் மூலம் என பலவடிவங்களில் பட்டாக்களை வழங்க ஆட்களை தேடிப்பிடித்தனர். அதேபோல 67 ஆயிரம் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கும் நிதி, உதவி என ஆதரவுக்கரம் நீட்டியது தி.மு.க., அரசு.
இந்த நிகழ்ச்சியில் இல்லாத மதுரைக்கான கூடுதல் திட்டங்களையும் புதிதாக அறிவித்துள்ளார். மதுரைக்கான மாஸ்டர் பிளான் 2044 ஐ யும் அறிவித்தார். தென்மாவட்டங்களுக்கான முதலீட்டாளர் மாநாட்டையும், முதன்முதலாக மதுரையில் நடத்த ஏற்பாடு செய்தார் முதல்வர்.
இவ்வாறு தேர்தலை எதிர்கொள்ள, மதுரை பகுதியை வலுப்படுத்த முதல்வரின் இந்தப் பயணம் உதவி இருக்கும் என்பது தி.மு.க.,வின் நம்பிக்கை.

