
இருவருக்கு குண்டாஸ்
மதுரை: வில்லாபுரம் ஹவுசிங் போர்டு காலனியைச் சேர்ந்தவர் ஷா உசேன் 29. அழகப்பன் நகர் பாலமார்த்தாண்டம் 25. இருவர் மீதும் கொலை உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. இவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்து கமிஷனர் லோகநாதன் உத்தரவிட்டார்.
ரவுடி கொலை
மதுரை: செல்லுார் மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டித்துரை. போலீசாரின் ரவுடி பட்டியலில் உள்ளவர். வழக்கு ஒன்றில் ஜாமினில் வெளிவந்து 10 நாட்களான நிலையில் அப்பகுதி நாடகமேடையில் நேற்று மாலை துாங்கி கொண்டிருந்தபோது மர்ம கும்பல் கத்தியால் குத்திவிட்டு தப்பிச்சென்றது. பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
மின்சாரம் தாக்கி மாணவர் பலி
மேலுார்: உ. புதுப்பட்டி தமிழ்ச்செல்வம் மகன் ராஜாமணி 15. உறங்கான்பட்டி அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்தார். நேற்று முன் தினம் இரவு வீட்டின் மாடியில் உள்ள அறைக்கு துாங்க சென்றபோது அறையின் வெளியே உள்ள டாப் லைட் கம்பியில் கை உரசியதில் மின்சாரம் தாக்கி இறந்தார். கீழவளவு போலீசார் விசாரிக்கின்றனர்.
வீட்டில் 8 பவுன் திருட்டு
அலங்காநல்லுார்: சிக்கந்தர் சாவடி அருகே இ.எம்.டி.,நகர் விரிவாக்க பகுதி மகேந்திரன் 63. மனைவியுடன் 10 நாட்களுக்கு முன் பரமக்குடி உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சென்றார். நேற்று காலை திரும்பி வந்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 8 பவுன் நகை, ரூ.45 ஆயிரம் திருடு போனது தெரிந்தது. அலங்காநல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

