எங்கும் கும்மிருட்டாக இருக்கு அமைக்கணும் தெருவிளக்கு குமுறும் குடியிருப்போர்
எங்கும் கும்மிருட்டாக இருக்கு அமைக்கணும் தெருவிளக்கு குமுறும் குடியிருப்போர்
ADDED : செப் 01, 2026 07:02 PM

சோழவந்தான்: சோழவந்தான் பசும்பொன்நகரில் தெருவிளக்குகள் அமைக்காததால் கும்மிருட்டில் தவிப்பதாக குடியிருப்போர் வேதனை தெரிவித்தனர்.
பசும்பொன் நகரில் பேட்டை செல்லும் வழியில் முல்லையாற்று கால்வாய் கரையில் ஏராளமானோர் வசிக்கின்றனர். பல ஆண்டுகளாக இப்பகுதிகளில் தெருவிளக்குகள் அமைக்கவில்லை. இரவில் கும்மிருட்டாக உள்ளதால் குடியிருப்போர் சிரமமடைகின்றனர்.
அப்பகுதி குருவம்மாள் கூறியதாவது: இப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. தினமும் இரவு 7:00 மணிக்கு மேல் கும்மிருட்டாக உள்ளது. வீடுகளில் உள்ள விளக்கு வெளிச்சமே தெருவில் உள்ளது. இப்பகுதியில் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்களின் நடமாட்டம் அதிகமுள்ளது. தெருநாய்கள் படுத்திருப்பது தெரியாமல் மோதியதால், பலர் கடிபட்டு சிகிச்சை பெற்றுள்ளனர். இரவில் சிறுவர்களை வெளியே அனுப்ப அச்சமாக உள்ளது.
ரோட்டில் மேடு, பள்ளமிருப்பது தெரியாமல் அடிக்கடி பலர் விழுந்து காயமடைகின்றனர். திருடர்கள் பயத்தால் தவிக்கிறோம். பேரூராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தும் பலனில்லை. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
