/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
எதிர்ப்பை ஆயுதமாக மாற்றிய அழகிய தமிழ் மகள்
/
எதிர்ப்பை ஆயுதமாக மாற்றிய அழகிய தமிழ் மகள்
ADDED : நவ 02, 2025 03:37 AM

ரா மநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் அருகே தெற்கு காக்கூரை சேர்ந்தவர் ஜோதி மலர். விவசாய குடும்பத்தில் பிறந்த இவர் பி.டெக் முடித்து விட்டு பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். சமீபத்தில் புனேயில் அமைதி, சுற்றுச்சூழல், சுற்றுலா, கலாசாரத்தை வலியுறுத்தி நடந்த தேசிய மிஸ் ஹெரிடேஜ் அழகி போட்டியில் கலந்து கொண்டு 'மிஸ் டூரிசம் அம்பாசிடர் ஹெரிடேஜ் இந்தியா 2025' எனும் பட்டத்தை வென்றுள்ளார். இதையடுத்து தாய்லாந்தில் நவ.,8 ல் நடக்கவுள்ள 'மிஸ் ஹெரிடேஜ் இன்டர்நேஷனல் 2025' போட்டியில்பங்கேற்கவுள்ளார்.
தினமலர் சண்டே ஸ்பெஷலுக்கு அவரது மனம் திறந்த பேட்டி: சினிமா மீதுஎனக்கு இருந்த காதல் தான் என்னை இவ்வளவு துாரம் கொண்டு வந்துள்ளது. அழகி போட்டியில் கலந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் கல்லுாரியில் படிக்கும் போதே தோன்றியது. சிறு வயது முதல் கருப்பாக சுருட்டை முடியுடன் இருப்பதால் பெற்றோருக்கு செலவு வைப்பேன் (திருமணத்தில் நிறைய நகை போட வேண்டும்) என கிண்டலாக கூறுவர்.
ஆனால் கண்ணாடியில் என்னை பார்க்கும் போது எனக்கு நான் அழகாக இருப்பது போல் தோன்றும். பின்னர் ஏன் அழகாக இல்லை என்று கூறுகின்றனர் என்ற கேள்விக்கு விடை தேடும் போது தான் என் நிறத்தை வைத்து மதிப்பிடுவதை புரிந்து கொண்டேன்.
திரையின் மாயை திரையில் ஒரு குறிப்பிட்ட நிறம், வடிவத்தை மட்டும் அழகு என காட்டுவதை சமூகம் அப்படியே ஏற்றுக்கொண்டு மற்ற எல்லோரையும் அழகு இல்லை என்ற வட்டத்துக்குள் கொண்டு வந்து விடுகிறது. எம்.ஜி.ஆர்., போன்று கலராக இருப்பது தான் அழகு என்பர். ரஜினிகாந்த், விஜயகாந்த், தனுஷ் போன்றோர் வருகைக்கு பின்பு நிறத்தை மட்டும் வைத்து அழகை மதிப்பிடும் மாயை உடைந்தது.
அதிலும் பெண்கள் நிறமாக இருப்பது தான் அழகு என்பதை ஆணித்தரமாக பதிய வைத்துள்ளனர். திரையில் குறிப்பிட்ட வடிவிலும், நிறத்திலும் இருக்கும் ஒருவரை அழகு என நம்ப வைத்து விட்டால், அவரை போன்று இருக்கும் அனைவரையும் இந்த உலகம் அழகாக பார்க்கும் என உணர்ந்த பின் சினிமாவில் வர வேண்டும் என்ற ஆசை மேலும் அதிகரித்தது. அப்போது தான் மாடலிங் மூலம் சினிமாவுக்குள் எளிதாக செல்ல முடியும் என தெரிய வந்தது.சென்னையில் இருக்கும் போது மாடலிங் துறையில் பயிற்சி பெற ஒரு நிறுவனத்திற்கு சென்றேன். அங்குள்ளவர்கள் என்னை பார்வையிலே எடை போட்டது எனது தன்னம்பிக்கையை உடைத்தது. ஒரு டி.வி., சீரியலில் வேலைக்கார பெண் கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு நண்பர்கள் மூலம் வந்தது. அங்கும் எனது நிறத்தை வைத்து மதிப்பிட்டது எனக்குள் தாக்கத்தை ஏற்படுத்தியது.
எது அழகு அழகு என்பது நீங்கள் மற்றவர்களை மதிப்புடன் நடத்துவதிலும், சுயமரியாதையுடன் இருப்பதிலும் உள்ளது. வெளி அழகு நிரந்தரமில்லாதது. 'கருப்பு என்றால் அசிங்கம் என்று கூறுகிறார்கள். அதையே எனது அடையாளமாக மாற்ற வேண்டும்' என தோன்றியது.
ஆன்லைன் மூலம் மாடலிங் எப்படி செய்வது என கற்றுக்கொண்டு கல்லுாரி விடுதியில் யாருக்கும் தெரியாமல் பயிற்சி செய்வேன்.மாடலிங் துறை மீது உள்ள ஆசையால் கல்லுாரி முடித்த பின் பெங்களூருவில் வேலை செய்ய முடிவு செய்தேன்.சென்னையில் எனக்கு திறக்காத கதவு, பெங்களூருவில் சிவப்பு கம்பளத்துடன் வரவேற்றது. முதல் முறையாக 2024 மிஸ் கர்நாடகா அழகி போட்டியில் 'மிஸ் பேஷன் ஐகான்' எனும் சப்டைடில் கிடைத்தது.
பின் 'மிஸ் ஹெரிடேஜ் இந்தியா' போட்டிக்கு செல்ல 10 நாட்களே இருந்த போது வீட்டில் மாடலிங் செல்ல சம்மதிக்கவில்லை. எனது நீண்ட நாள் கனவு நிறைவேற இருந்த போது குடும்பத்தில் ஒத்துழைப்பு இல்லாமல் இருந்தது. தேசிய அளவிலான போட்டியில் வெற்றி பெற்ற பின், எனக்கு கொடுத்த சுதந்திரத்தை சரியாக பயன்படுத்தியதை குடும்பத்தினர் புரிந்து கொண்டு அனுமதித்தனர்.
எதிர்காலத்தில் சினிமாவில் பயணிப்பதற்கான அடித்தளத்தை ஏற்படுத்தி வருகிறேன். கல்வி, வாய்ப்புகள் இல்லாமல் உள்ள பெண் குழந்தைகளை வலிமையான பெண்களாக உருவாக்க அறக்கட்டளை தொடங்க வேண்டும் என்பது எனது இலக்கு.
இவ்வாறு அவர் கூறினார்.

