ADDED : டிச 07, 2025 08:55 AM
திருமங்கலம்: ஆலம்பட்டி எப்.எம்., மெட்ரிக் பள்ளியில் பள்ளிகளுக்கு இடையிலான பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடந்தன.
இதில் பெண்களுக்கான நொண்டி அடித்தல், பரம பதம், தாயம் உருட்டல், தட்டாங்கல் உள்ளிட்ட போட்டிகளும், ஆண்களுக்கான பம்பரம் சுற்றுதல், கிட்டி புல் விளையாடுதல், கோலிக்குண்டு விளையாடுதல், டயர் உருட்டுதல் போட்டிகளும் நடந்தன.
பள்ளி நிர்வாகி தர்ம கிருஷ்ண ராஜா தலைமை வகித்தார். தாளாளர் நாராயணா ராஜா முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் மோனிகா வரவேற்றார். 30க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த 300 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
4 - 9ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நடந்த பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பை, சான்றிதழ் வழங்கப்பட்டது.
உடற்கல்வி ஆசிரியர்கள் கூறியதாவது: பாரம்பரிய விளையாட்டுக்கள் பழங்கால விளையாட்டுகள் தற்போது அழிந்து வருகின்றன. சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அலைபேசிக்கு அடிமையாகி விடுகின்றனர். இதனால் கவனச்சிதறல் உள்ளிட்டவைகளால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே பழங்கால பாரம்பரிய விளையாட்டுகளை மீட்டெடுத்து நடைமுறைக்கு கொண்டு வருவதன் மூலம் மாணவர்களின் அலைபேசி மோகத்தை கட்டுப்படுத்த இயலும்.
இதன் மூலம் அவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமையும். இதனை செயல்படுத்தும் விதமாக தற்போது போட்டிகள் நடத்தப்பட்டன. அனைத்து பள்ளிகளிலும் இதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றனர்.

