மா.கம்யூ., போராட்டத்தால் மூடப்பட்ட கலெக்டர் ஆபீஸ்
மா.கம்யூ., போராட்டத்தால் மூடப்பட்ட கலெக்டர் ஆபீஸ்
ADDED : ஆக 20, 2026 11:33 PM

நாகப்பட்டினம்: முழு பயிர் கடன் தள்ளுபடி கோரி, நாகை கலெக்டர் அலுவலக வாயிலில், மா.கம்யூ., சார்பில் நேற்று காலை, 10:00 மணிக்கு முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது. பாதுகாப்பு கருதி, கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் கதவை போலீசார் பூட்டி, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் தலைமையில், 300க்கும் மேற்பட்ட நிர்வாகிகள், அலுவலகம் உள்ளே செல்ல முயன்றனர். அப்போது, போலீசாருக்கும், கம்யூ., கட்சியினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அலுவலகத்தில் நான்கு வாயில்களும் அடைக்கப்பட்டதால், பொதுமக்கள் அலுவலகத்திற்குள் செல்ல முடியவில்லை. கள ஆய்வில் இருந்த கலெக்டர் பிரவீன்குமார், மதியம், 1:40 மணிக்கு, அலுவலக பின் வாயில் வழியாக, அலுவலகத்திற்கு வந்தார். எஸ்.பி., கேழ்கர் சுப்ரமண்ய பாலச்சந்திரா, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தினார். போராட்டத்தால், கலெக்டர் அலுவலகம் வந்த பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.
