/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கள்ளவழி கருப்பனார் கோவிலில் 1,600 கிலோ கறி சமைத்து விருந்து
/
கள்ளவழி கருப்பனார் கோவிலில் 1,600 கிலோ கறி சமைத்து விருந்து
கள்ளவழி கருப்பனார் கோவிலில் 1,600 கிலோ கறி சமைத்து விருந்து
கள்ளவழி கருப்பனார் கோவிலில் 1,600 கிலோ கறி சமைத்து விருந்து
ADDED : பிப் 10, 2025 07:21 AM
ராசிபுரம்: நாமகிரிப்பேட்டை அருகே, கள்ளவழி கருப்பனார் கோவிலில், 1,600 கிலோ கறி சமைத்து சமபந்தி விருந்து போடப்பட்டது.
நாமகிரிப்பேட்டை அடுத்த ஆர்.புதுப்பட்டியை ஒட்டியுள்ள போதமலை தொடர்ச்சியில், பிரசித்தி பெற்ற கள்ளவழி கருப்பனார் கோவில் உள்ளது. மலைவாழ் மக்களுக்கான இந்த கோவிலில், ஆண்டுதோறும் தை மாதம் கடைசி ஞாயிறு அன்று முப்பூஜை விழா நடப்பது வழக்கம். இக்கோவிலில் மலைவாழ் குடும்பத்தினர் தான் பூசாரியாகவும் உள்ளனர். கிடா, கோழி, பன்றி ஆகியவை பலியிட்டு, அந்த கறியை சமைத்து சமபந்தி விருந்து வைக்கப்படும்.
இதையொட்டி, நேற்று மாலை, 4:00 மணிக்கு சமபந்தி விருந்துக்கான பூஜைகள் தொடங்கின. இரவு பூஜையின் முடிவில், 50 ஆட்டு கிடாக்கள், 60 பன்றிகள், 25 சேவல்கள் பலியிட்டு முப்பூஜை செய்யப்பட்டது. கடந்தாண்டு தங்களது வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் ஆடு, பன்றி, சேவல்களை பலியிட காணிக்கையாக கொடுத்தனர்.
இதில், 450 கிலோ ஆட்டுக்கறி, 50 கிலோ கோழிக்கறி, 1,100 கிலோ பன்றிக்கறி தயார் செய்யப்பட்டது. தொடர்ந்து மலை அடிவாரத்தில் உள்ள வயலில் சமபந்தி விருந்துக்கான சமையல் செய்யப்பட்டது. 2,000 கிலோ அரிசி மூலம் உணவு தயாரிக்கப்பட்டது. 1,600 கிலோ கறி சமைக்கப்பட்டது. இதில், 7,000க்கும் மேற்பட்டோர் விருந்து சாப்பிட்டனர்.

