வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு 60 போலீசாருக்கு வெள்ள மீட்பு பயிற்சி
வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு 60 போலீசாருக்கு வெள்ள மீட்பு பயிற்சி
ADDED : ஜூலை 04, 2026 04:03 AM

நாமக்கல்:நாமக்கல்லில், 60 போலீசாருக்கு வெள்ள மீட்பு, அவசர கால முதலுதவி பயிற்சி அளிக்கப்பட்டது.
வடகிழக்கு பருவமழை காலங்களில், நாமக்கல் மாவட்டத்தில் பாதிப்பு ஏற்படும் பகுதிகளில், பொதுமக்களை காக்கும் வகையில், முன்னேற்பாடுகளை செய்ய போலீசார் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கூடுதல் டி.ஜி.பி., நஜ்முல்ஹோடா உத்தரவுப்படி, கமாண்டோ பயிற்சி பள்ளி போலீஸ் எஸ்.பி.,(பொ) கார்த்திகேயன், நாமக்கல் எஸ்.பி., யாதவ் கிரீஷ் அசோக் ஆகியோர் மேற்பார்வையில், கமாண்டோ பயிற்சி பள்ளி பயிற்சியாளர்கள் மூலம் போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, பயிற்சியாளர்களான எஸ்.ஐ., செந்தில்குமார், ஏட்டுகள் சுவிக்கின் ராஜ், கணேச பாண்டியன், ஜான்பீட்டர் ஆகியோர், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சட்டம்-ஒழுங்கு மற்றும் ஆயுதப்படை ஆண், பெண் போலீசார், 60 பேருக்கு, மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில், வெள்ள மீட்பு பயிற்சி, மருத்துவ முதலுதவி பயிற்சி, மரம் அறுக்கும் இயந்திரத்தை இயக்கும் பயிற்சி, டவர் லைட் இயக்கும் பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகளை வழங்கினர்.
தொடர்ந்து, நாமக்கல் மலைக்கோட்டை கமலாலய குளத்தில், படகு இயக்கும் பயிற்சி மூலம், தண்ணீரில் தத்தளிக்கும் மக்களை எப்படி மீட்பது என்பது குறித்து பயிற்சியளிக்கப்பட்டது. 'பயிற்சி பெற்ற அனைத்து போலீசாரும், மழைக்காலங்களில் மக்களின் பாதுகாப்பிற்கு பக்க பலமாக இருப்பார்கள்' என, பயிற்சி பெற்றவர்கள் தெரிவித்தனர்.
