ADDED : பிப் 27, 2025 09:59 PM

கூடலுார், ; கூடலுார் மரப்பாலம் அருகே, பைக்கின் மீது மோதி விழுந்து மயங்கிய சிறுத்தை, ஒரு சில நிமிடத்தில் தானாக எழுந்து வனத்துக்குள் சென்றது.
கூடலுாரை சேர்ந்த ராஜேஷ் என்பவர் நேற்று காலை, 7:30 மணிக்கு கோழிக்கோடு சாலை வழியாக நாடுகாணி நோக்கி சென்றார். அப்போது, மரப்பாலம் அருகே வேகமாக சாலையை கடந்த இரண்டு சிறுத்தைகளில் ஒன்று பைக்கின் மீது மோதியது.
அதிர்ச்சியில் சாலையில் அசைவற்று கிடந்தது. சில நிமிடங்களில் திடீரென எழுந்து சிறுத்தை வனப்பகுதிக்குள் சென்றது. இச்சம்பவத்தில் காயம் அடைந்த ராஜேஷ் சிகிச்சைக்காக, கேரளா தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்து நடந்த பகுதியில், நாடுகாணி வனச்சரகர் வீரமணி, வனக்காப்பாளர் மணிகண்டன், காவலர் கலைகோவில் ஆய்வு செய்தனர்.
வனத்துறையினர் கூறுகையில், 'சிறுத்தை திடீரென சாலையை கடக்கும் போது, இச்சம்பவம் நடந்துள்ளது. சம்பவத்தின் போது அதிர்ச்சியில் சிறுத்தை சிறிது நேரம் சாலையில் விழுந்து கிடந்துள்ளது. பின் விரைவாக எழுந்து சென்றதை பலரும் பார்த்துள்ளனர். சிறுத்தை ஆரோக்கியமாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து அப்பகுதியில் கண்காணித்து வருகிறோம். வாகன ஓட்டுனர்கள் இப்பகுதியை எச்சரிக்கையுடன் கடந்து செல்ல வேண்டும்,' என்றனர்.

