பட்டா வழங்க லஞ்சம் பெற்ற 2 பெண் வி.ஏ.ஓ.,க்கள் கைது
பட்டா வழங்க லஞ்சம் பெற்ற 2 பெண் வி.ஏ.ஓ.,க்கள் கைது
UPDATED : நவ 04, 2026 12:00 AM
ADDED : நவ 03, 2026 11:14 PM

ஊட்டி:
நீலகிரி மாவட்டம், எடக்காடு கிராமத்தை சேர்ந்த வசந்த், தன் தந்தை பெயரில் உள்ள, 3.5 சென்ட் நிலத்தை, தானம் பெற்று, பட்டா மாற்றத்திற்காக ஆன்லைனில் விண்ணப்பித்து, பிக்கட்டி வி.ஏ.ஓ., உமா பிரியா, 28, என்பவரை அணுகினார்.
அவர், பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய, 1.50 லட்சம் ரூபாய் லட்சம் கேட்டுள்ளார். பேரம் பேசி இறுதியில், 1.25 லட்சம் ரூபாய் தர முடிவானது. ஆனாலும், லஞ்சம் தர விருப்பம் இல்லாத வசந்த், நீலகிரி லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரிடம் அளித்த புகாரில், உமா பிரியாவை போலீசார் நேற்று கையும், களவுமாக கைது செய்தனர்.
l தேனி மாவட்டம், பெரியகுளம், பெரியார் காலனியை சேர்ந்த விவசாயி காளிராஜ், 67, தாய் காளியம்மாள் தனக்கு தானமாக கொடுத்த, 58.45 சென்ட் நிலத்தை, பட்டா பெயர் மாறுதல் செய்ய தாமரைக்குளம் வி.ஏ.ஓ., வித்யாவிடம் விண்ணப்பித்தார். அவர் 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டார். காளிராஜ் புகாரில், தேனி லஞ்ச ஒழிப்பு போலீசார், வித்யா, புரோக்கர் மருது, 28, ஆகியோரை கைது செய்தனர்.
