/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வண்ணமயமாக மாறிய அரசு பள்ளி வளாகம்: ஆர்வத்துடன் பள்ளிக்கு வரும் பழங்குடி மாணவர்கள்
/
வண்ணமயமாக மாறிய அரசு பள்ளி வளாகம்: ஆர்வத்துடன் பள்ளிக்கு வரும் பழங்குடி மாணவர்கள்
வண்ணமயமாக மாறிய அரசு பள்ளி வளாகம்: ஆர்வத்துடன் பள்ளிக்கு வரும் பழங்குடி மாணவர்கள்
வண்ணமயமாக மாறிய அரசு பள்ளி வளாகம்: ஆர்வத்துடன் பள்ளிக்கு வரும் பழங்குடி மாணவர்கள்
ADDED : நவ 13, 2025 08:19 PM

பந்தலுார்: பந்தலுார் அருகே மாநில எல்லையான பாட்டவயல், அரசு பள்ளி வளாகம் ஓவியங்களால் வண்ணமயமாக மாறி உள்ளது.
தமிழக எல்லையான பாட்டவயல் பகுதியில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள இந்த பள்ளியில், தோட்ட தொழிலாளர்கள் குழந்தைகள் மற்றும் பழங்குடியின மாணவர்கள் படித்து வருகின்றனர்.
பழங்குடியின மாணவர்கள் அதிக அளவில் படிப்பதால், அடிக்கடி இடைநிற்றலால் அவர்களின் கல்வி பாதிக்கப்பட்டது.
இதனால், மாணவர்களின் வீடுகளுக்கு ஆசிரியர்கள் அடிக்கடி சென்று, விழிப்புணர்வு ஏற்படுத்தி பள்ளிக்கு மீண்டும் அழைத்து வந்தனர். இந்நிலையில், தற்போது மாணவர்களை கவரும் வகையில், பள்ளியின் வகுப்பறைகள் மற்றும் வளாகங்கள் வண்ணமயமான ஓவியங்கள் மூலம் அழகுபடுத்தப்பட்டு உள்ளது. அதேபோல் பள்ளி வளாகத்தை சுற்றியுள்ள சுவர்களில், தேச தலைவர்களின் படங்கள் மற்றும் பொன்மொழிகள் எழுதி வைத்துள்ளனர்.
அதில், கர்ம வீரர் காம ராஜர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் படமும் வரைந்துள்ளது அனைவரையும்கவர்ந்துள்ளது. வகுப்பறைகள் மற்றும் பள்ளி வளாகங்கள் வண்ண ஓவியங்களால், அழகுப்படுத்தப்பட்டுள்ளதால் மாணவர்களும், இடைநிறுத்தம் இல்லாமல் ஆர்வத்துடன் பள்ளிக்கு வந்து, படிப்பதில் ஆர்வம் காட்டி வருவதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
தலைமை ஆசிரியர் பூபதி கூறுகையில், ''வெறும் வகுப்பறைகள் மற்றும் பாடம் நடத்தும் ஆசிரியர் என்று இல்லாமல், மாணவர்களை கவறும் வகையிலும், பொது அறிவை மேம்படுத்தும் வகையிலும் அறிவியல், கணிதம், கம்ப்யூட்டர், தமிழ் மற்றும் ஆங்கில உயிர் எழுத்துக்கள் உள்ளிட்ட ஓவியங்கள் வரையப்பட்டு உள்ளது.
இதனை பார்ப்பதால் மாணவர்களுக்கு, கல்வி கற்பதில் மிகுந்த ஈடுபாடு ஏற்பட்டுள்ளது காண முடிகிறது. இதனால் தொடர்ச்சியாக நாங்கள் பள்ளி வளாகத்தை முழுமையாக, அறிவு சார்ந்த ஓவியங்கள் நிறைந்த பள்ளியாக மாற்றி வருகிறோம்,'' என்றார்.

