/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பெண்ணுக்கு மாப்பிள்ளை வீட்டார் சீர்வரிசை; குரும்பர் பழங்குடியினரின் பாரம்பரிய வழக்கம்
/
பெண்ணுக்கு மாப்பிள்ளை வீட்டார் சீர்வரிசை; குரும்பர் பழங்குடியினரின் பாரம்பரிய வழக்கம்
பெண்ணுக்கு மாப்பிள்ளை வீட்டார் சீர்வரிசை; குரும்பர் பழங்குடியினரின் பாரம்பரிய வழக்கம்
பெண்ணுக்கு மாப்பிள்ளை வீட்டார் சீர்வரிசை; குரும்பர் பழங்குடியினரின் பாரம்பரிய வழக்கம்
ADDED : பிப் 03, 2025 11:11 PM

குன்னுார்; குன்னுார் அருகே செங்கல்புதுார் கிராமத்தில் வாழும் குரும்பர் பழங்குடியினரில், பெண் வீட்டாருக்கு, மாப்பிள்ளை வீட்டார், சீர்வரிசை வழங்கி திருமணம் நடந்தது.
நீலகிரி மாவட்டத்தில், குரும்பர் தொல் பழங்குடியினர், பாரம்பரியம் மாறாமல் திருமணம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், குன்னுார் செங்கல்புதுார் குரும்பர் பழங்குடியின கிராமத்தை சேர்ந்த சசிக்குமார், புதுக்காடு கிராமத்தை சேர்ந்த சுவர்ணலட்சுமி ஆகியோருக்கு பாரம்பரிய முறையில் திருமணம் நடந்தது.
ஒரு நாள் முன்னதாக, பெண் வீட்டார், செங்கல்புதூர் கிராமத்திற்கு சென்று மாப்பிள்ளை உறவினர்களின் வீடுகளில் தங்கினர்.
அங்கு, முகூர்த்த நாளில், கூந்தப்பனை ஓலையில் தோரணங்கள் சூழ, மாப்பிள்ளை வீட்டின் முன் பந்தல் அமைத்து, வெற்றிலை, தண்ணீர், மஞ்சள், குங்குமம் வைத்து, மாப்பிள்ளை, பெண்ணிற்கு கருகமணி மாலை அணிந்து, தாலி கட்டினார்.
நிறை குடத்தில் தண்ணீரை சுமந்து வரும் பெண்ணை வீட்டிற்குள் அழைத்து சென்றனர். அங்கு, தானியங்களை மாப்பிள்ளை வீட்டாரிடம், பெண் வழங்கினார். வீட்டில் விளக்கேற்றி, தாய், தந்தையர்கள் காலில் விழுந்து ஆசி பெற்றனர்.
தொடர்ந்து, மாப்பிள்ளை வீட்டார், பெண் வீட்டாருக்கு, 'பொன்னானம்' எனும் பணம், பொருள், தானியங்களுடன் வழங்கும் நிகழ்வில், தாம்பூல தட்டில் அம்மியை வைத்து, இருவீட்டாரும் உலக்கையில் துாக்கி சடங்கு நடத்தினர்.
விருந்துக்கு பிறகு, கிராம மக்கள் ஒன்றிணைந்து, பாரம்பரிய இசைக்கு ஏற்ப நடனமாடி மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.
பல இடங்களில் வரதட்சணை பிரச்னையால் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மாப்பிள்ளை வீட்டார், பெண் வீட்டாருக்கு சீர்வரிசை கொடுத்து நடந்த திருமணம் மற்றவருக்கு சிறந்த உதாரணமாக இருந்தது.

