ஆக்கிரமிப்புகளை அகற்ற '144' உயர் நீதிமன்ற கிளை உத்தரவு
ஆக்கிரமிப்புகளை அகற்ற '144' உயர் நீதிமன்ற கிளை உத்தரவு
ADDED : ஜூலை 08, 2026 07:30 AM
மதுரை: ' ஆக்கிரமிப்பை அகற்ற, தேவைப்பட்டால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கலாம்' என, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே நடுப்பட்டி முருகேசன் தாக்கல் செய்த மனு: கல்லாலங்குடியிலுள்ள சமுத்திரக்குளம் நீர்நிலையில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. அகற்ற உத்தரவிட இந்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தேன். திருவரங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆறு மாதங்களில் ஆக்கிரமிப்பை அகற்ற, 2024ல் இந்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதை நிறைவேற்றவில்லை. கலெக்டர் அருணா, ஆலங்குடி தாசில்தார் வில்லியம் மோசஸ், திருவரங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமார் மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி அமர்வு விசாரித்தது.
அரசு வழக்கறிஞர் ராஜகோபாலன், 'நீர்நிலையில் அதிக வீடுகள் கட்டப்பட்டுள்ளன. அதிகாரிகளால் அங்கு நில அளவை கூட மேற்கொள்ள முடியாத சூழல் நிலவுகிறது. நோட்டீஸ் அனுப்ப முடியவில்லை' என்றார்.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
நாம் பலவீனமான அரசு அல்ல. எவ்வித தண்டனைக்கும் அஞ்சும் நிலையின்றி நீர்நிலைகளை ஆக்கிரமிக்கலாம் என, யாரும் கருதக்கூடாது. அதிகாரிகள் அளவீடு செய்ய, நோட்டீஸ்களை வழங்க, போலீஸ் பாதுகாப்பை மாவட்ட எஸ்.பி., வழங்க வேண்டும். அவசியம் ஏற்பட்டால் நில அளவையின் போது தடையுத்தரவு பிறப்பிக்கலாம்.
இவ்வாறு உத்தர விட்டனர்.
