/
உள்ளூர் செய்திகள்
/
புதுக்கோட்டை
/
கீரனுார் பஸ் ஸ்டாண்டில் 'பிளாஸ்டிக்' கல்வெட்டுகள்
/
கீரனுார் பஸ் ஸ்டாண்டில் 'பிளாஸ்டிக்' கல்வெட்டுகள்
ADDED : மார் 20, 2024 12:00 AM
புதுக்கோட்டை:புதுக்கோட்டை - திருச்சி கீரனுார் தேர்வு நிலை பேரூராட்சி பகுதியில், 1 கோடி ரூபாயில், கீரனுார் பஸ் ஸ்டாண்டு புனரமைப்பு பணிகள் நடந்தன.
பணிகள் நிறைவடைவதற்குள், தேர்தல் அறிவிப்பு வந்து விடும் என்ற எண்ணத்தில், அமைச்சர்கே.என்.நேருவை வைத்து, பஸ் ஸ்டாண்டு திறப்பு விழா, 15ம் தேதி தடபுடலாக நடந்தது. எந்த நேரமும் தேர்தல் அறிவிப்பு வெளியாகலாம் என்ற நிலை இருந்தது.
இதனால், அவசரமாக, புதிதாக கட்டிய பஸ் ஸ்டாண்டில் கல்வெட்டு, ஆர்ச் என அனைத்தும் பிளக்ஸ் பேனரில் வைக்கப்பட்டிருந்ததை அமைச்சர் நேரு திறந்து வைத்தார்.
பார்ப்பதற்கு கல்வெட்டு போலவே இருந்த அதை நெருக்கமாக சென்று பார்த்தவர்களுக்குத் தான், 'பிளாஸ்டிக்' பிளக்ஸ் பேனர் என்பது தெரிந்தது.
கல்வெட்டு தயாரிப்பதற்குள் தேர்தல் அறிவிப்பு வந்து விடும்; அதன்பின், அமைச்சர்கள் பெயரை வெளியிட முடியாது என்ற எண்ணத்தில் அவசரம் அவசரமாக கல்வெட்டு போல காட்சியளிக்கும் பதாகைகளை அமைச்சர் நேரு திறந்தார்.
இது, அந்த ஊரில் விவாதத்தை துவக்கியுள்ளது. பலரும் தமிழக அரசின் செயலை கண்டித்து வருகின்றனர்.
அமைச்சர்கள் எதிர்பார்த்தது போலவே, மறுநாள், 16ம் தேதி தேர்தல் அறிவிப்பு வெளியானது; நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வந்தன.

